சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லா இந்தியா திரும்பினார்: டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
டெல்லி: சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுபான்ஷு சுக்லா இந்தியா திரும்பினார். அதிகாலையில் டெல்லி விமான நிலையம் வந்த சுபான்ஷு சுக்லாவை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நாசா மற்றும் இஸ்ரோ ஆதரவுடன் உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் ஆக்சியம்-4 திட்டத்தில் இந்திய விண்வெளி வீரரும் விமானப்படை கேப்டனுமான சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட குழுவினர் ஜூன் மாதம் 25ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு புறப்பட்டனர். சுபான்ஷூ குழுவினர் 18 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.
பின்னர் ஜூலை 15ம் தேதி விண்வெளி வீரர்கள் குழு பூமிக்கு திரும்பியது. இதனை தொடர்ந்து சுபான்ஷூ சுக்லா இன்று இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுபான்ஷூ சுக்லா இன்று பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.