பன்னாட்டு விமான முனையத்தில் பயணிகளின் உடைமைகள் வருவதில் தாமதம்: நீண்ட நேரம் காத்திருப்பில் அவலம்
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் துபாய், அபுதாபி, கத்தார், லண்டன் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகள் கன்வேயர் பெல்டுக்கு வருவதில் காலதாமதமாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் வெளிநாடுகளில் வரும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது.
சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் துபாய், அபுதாபி, கத்தார், லண்டன் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான விமானங்கள் வந்திறங்கும் பயணிகள் குடியுரிமை சோதனை முடிந்து, தங்களின் உடைமைகளை எடுப்பதற்காக, கன்வேயர் பெல்ட் பகுதிக்கு வருகின்றனர். பின்னர், தங்களின் உடைமைகளுடன் சுங்கச் சோதனை முடித்து வெளியே செல்வதற்கு தயாராவது வழக்கம். எனினும், கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு விமானங்களில் வரும் பயணிகளின் உடைமைகள் கன்வேயர் பெல்ட்டுக்கு வருவதில் காலதாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக துபாய், அபுதாபி, கத்தார், சார்ஜா, லண்டன் விமானங்களில் வரும் பயணிகளுக்கே இதுபோன்ற அவலநிலை ஏற்படுகிறது.
வெளிநாட்டு பயணிகளின் உடைமைகள் கன்வேயர் பெல்ட்டுக்கு வர தாமதவதற்கு காரணம், அந்த உடைமைகளை விமானங்களில், இறக்கி கன்வேயர் பெல்ட்டில் வருவதை கையாளும் தரைதள ஒப்பந்த ஊழியர்களில் பலர் அனுபவமின்றி பணிகளை மெதுவாக செய்வது, பிசினஸ் கிளாஸ் பயணிகளின் உடைமைகளை முதலில் கன்வேயர் பெல்ட் அனுப்பாமல், எக்னாமிக் கிளாஸ் பயணிகளின் உடைமைகளை முதலில் அனுப்புவது போன்ற குளறுபடிகளால் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அதேபோல் உள்நாட்டு விமான முனையத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வரும் விமானங்கள், சென்னை விமானநிலைய சரக்கக பகுதியில் நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து ஏர்லைன்ஸ் நிறுவன வாகனங்கள் மூலம் உள்நாட்டு முனையத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதனால் சென்னை வரும் பயணிகள், சுமார் ஒரு மணி நேரம் கழித்தே விமானநிலைய வெளிப்பகுதிக்கு வரவேண்டிய அவலநிலையும் நீடிக்கிறது. மேலும், சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் இரவு நேரங்களில் பேட்டரி வாகனங்கள் மற்றும் லிப்ட்டுகள் குறைவான அளவில் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதில் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், உள்நாட்டு முனையத்தில் ஏரோபிரிட்ஜ் மற்றும் டாக்சி வே அமைக்கும் பணிகள் நடப்பதால், விமானநிலைய சரக்கக பகுதியில் உள்நாட்டு விமானங்கள் நிறுத்தப்படுகின்றன. இப்பணிகள் முடிந்ததும், வழக்கம்போல் டெர்மினல் அருகே விமானங்கள் வந்து நிறுத்தப்படும். இரவில் பேட்டரி வாகனங்கள் மற்றும் லிப்ட்டுகள் முழுமையாக இயங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், வெளிநாட்டு பயணிகளின் உடைமைகள் கன்வேயர் பெல்ட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்படுவது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர்.