ஒருங்கிணைந்த 3வது விமான முனைய பணிகள் 2026 ஜூனில் நிறைவடையும்: சென்னை ஏர்போர்ட் இயக்குநர் தகவல்
சென்னை: சென்னையில் ஒருங்கிணைந்த 3வது விமான முனைய பணி 2026 ஜூனில் நிறைவடையும் ஏர்போர்ட் இயக்குநர் தெரிவித்து உள்ளார். சென்னை விமான நிலைய புதிய இயக்குனர் ராஜா கிஷோர், சென்னை விமான நிலையத்தில் இயக்குனராக இருந்து தற்போது, டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சி.வி. தீபக் ஆகியோர் இணைந்து சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் அளித்த பேட்டி: சென்னை விமான நிலையத்தில் இரண்டாம் கட்ட கட்டுமான பணியில், ஒருங்கிணைந்த மூன்றாவது விமான முனையம் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதுவரையில் 25 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன.
அந்த பணிகள் அனைத்தும் வருகிற 2026 மார்ச் 31ல் நிறைவடையும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அது கால நீடிப்பு செய்யப்பட்டு, 2026 ஜூன் 30க்குள் கட்டுமானப் பணிகள் நிறைவடையும்.
சென்னையில் இருந்து சவுதி அரேபியா, நியூயார்க், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரடி விமானங்கள் இல்லை என்ற குறைபாடுகள் பயணிகளிடையே உள்ளது. ஆனால் சென்னையில் இருந்து இந்த நாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கத்தக்க, போதுமான பயணிகள் இல்லை. 180 பயணிகள் பயணிக்க வேண்டிய விமானங்களில் 60, 70 பயணிகள் மட்டுமே பயணிக்கின்றனர். இதனால் பயணிகளிடம் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதை தவிர்ப்பதற்கு, இணைப்பு விமானங்களாக இயக்கப்படுகிறது. இதனால் பயணிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் பயணிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதோடு, விமான நிறுவனங்களும் நஷ்டம் இல்லாமல் செயல்பட முடியும்.
சென்னையில் விமானங்கள் தாமதமாவதற்கு, பெரும்பாலும் மோசமான வானிலை பருவநிலை மாற்றம் போன்றவைகள் காரணமாக அமைகிறது. டெல்லியில் மோசமான வானிலை காரணமாக தாமதமாக விமானம் சென்னைக்கு வந்தால், சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்கு விமானங்கள் புறப்பட்டுச் செல்வதும் தாமதம் ஆகிறது. ஆனாலும் தாமதங்களை தவிர்க்க விமான நிறுவனங்களும் இந்திய விமான நிலைய ஆணையமும் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுத்து, விமான நிலையத்தில் தரத்தை மேலும் உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.