ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு மேலாண்மை குழு பயிற்சி
ஊட்டி : பள்ளி கல்வி சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடந்தது. நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாநில திட்ட அலுவலகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 88 பள்ளிகளை சார்ந்த தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு சார்ந்த ஒரு நாள் பயிற்சி ஊட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது.
பயிற்யை முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தலைமை வகித்து பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். மாநில கருத்தாளர்கள் மரிய சூசை மற்றும் கார்த்தியாயினி பங்கேற்று பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியானது தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் விதமாகவும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
மேலும் பெற்றோருக்கான செயலியை பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிமுகம் செய்யவும் மேலும் பள்ளி மற்றும் பெற்றோர்களால் பள்ளிக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர் செயலியின் மூலம் உள்ளீடு செய்து அவை மாதம் தோறும் நடைபெறும் மாவட்ட கலெக்டர் தலைமையிலான பள்ளி கல்வி துறையின் கூட்டத்தில் தீர்வு காணபடுகிறது என தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார், கல்வியல் கல்லூரியின் தாளாளர் நோயல் ஸ்டீபன், உதவி திட்ட அலுவலர் அர்ஜூனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் மற்றும் ஊட்டி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.