பா.ரஞ்சித் படப்பிடிப்பில் விபத்து எதிரொலி; ஸ்டன்ட் கலைஞர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்: அக்ஷய் குமாரின் செயலால் நெகிழ்ந்த திரையுலகம்
சென்னை: சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டண்ட் கலைஞர் எஸ்.எம். ராஜு என்பவர் உயிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணிபுரியும் ஸ்டண்ட் மேன்களின் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை மற்றும் நிதிப் பாதுகாப்பின்மையை இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. இந்நிலையில், இந்திய திரைப்பட ஸ்டண்ட் மேன்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஜாஸ் குலாப், சங்கத்தில் உள்ள அனைத்து ஸ்டண்ட் மேன்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். அதற்காக இந்தி நடிகர் அக்ஷய் குமாரிடம் உதவி கேட்டுள்ளார். அதன்பேரில், சங்கத்தில் உள்ள 650 ஸ்டண்ட் மேன்களின் பெயரில் காப்பீட்டுத் தொகை செலுத்தியுள்ளார் அக்ஷய் குமார்.
ஒவ்வொரு ஸ்டண்ட் மேன்கள் மீதும் தலா ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை செலுத்தியுள்ளார். அக்ஷய் குமார் தனது சொந்த பணத்தில் இருந்து இதை செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் இந்த செயலுக்கு பல தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து எஜாஸ் குலாப் பேசும்போது, ‘‘அக்ஷய் குமாரை தொடர்பு கொண்டு எங்கள் கோரிக்கையை சொன்னபோது அதை உடனடியாக ஏற்று 650 ஸ்டண்ட் மேன்களின் முழு காப்பீட்டு பிரீமியத்தையும் அவரே செலுத்துகிறார். நாங்கள் அவருக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். அவரது இந்த உதவியால், இனி எந்த ஒரு ஸ்டண்ட் கலைஞரின் குடும்பமும் நிதி நெருக்கடியைச் சந்திக்காது’’ என்று தெரிவித்துள்ளார்.