ஐஎன்எஸ் ஹிமகிரி, உதயகிரி 2 புதிய போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
திருமலை: ஐஎன்எஸ் ஹிமகிரி, உதயகிரி ஆகிய இரண்டு புதிய போர்க்கப்பல்கள் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் ஹிமகிரி, உதயகிரி ஆகிய போர்க்கப்பல்கள் இந்திய நாட்டிற்கு நேற்று அர்ப்பணிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 2 போர்க்கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணித்து பேசியதாவது:
விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படைக்கு 2 போர்க்கப்பல்கள் மூலம் பலம் அதிகரித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டு தரத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல்கள், இந்தியாவின் தொழில்நுட்ப வலிமையின் அடையாளமாக நிற்கும். இந்தோ- பசிபிக் பிராந்தியத்திலும், சீன எல்லையிலும் பாதுகாப்பில் இந்த 2 கப்பல்களும் முக்கிய பங்கு வகிக்கும். அதிநவீன தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் அவற்றை உருவாக்குவது நாட்டின் பாதுகாப்பில் மற்றொரு மைல்கல்லாக நிற்கும்.
ஆத்மநிர்பர் பாரதத்தின் கொள்கைக்கு சான்றாக, நமது உள்நாட்டு எம்எஸ்எம்இ துறையின் தொழில்நுட்ப வலிமை இந்த கப்பல்களில் பிரதிபலிக்கிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் இலக்குகளின்படி, 2050ம் ஆண்டுக்குள் 200 போர்க்கப்பல்களை கட்டமைக்கும் திட்டம் உள்ளது. இது உலக அரங்கில் இந்திய கடற்படையின் சக்தியை மேலும் வலுப்படுத்தும். ஐஎன்எஸ் உதயகிரி மும்பையில் உள்ள மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டது.
ஐஎன்எஸ் ஹிம்கிரி கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ்-என்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டப்பட்டது. இந்த போர்க்கப்பல்களில் நவீன டீசல் மற்றும் எரிவாயு ஒருங்கிணைந்த உந்துவிசை ஆலைகள், மேம்பட்ட ஒருங்கிணைந்த தள மேலாண்மை அமைப்பு மற்றும் இந்திய தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார் சூட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த 2 கப்பல்களும் 75 சதவீத உள்நாட்டு உற்பத்தியால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படை போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் கட்டப்பட்ட 100வது கப்பலாக ஐஎன்எஸ் உதயகிரி ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.