ஊடுருவல்காரர்களுக்கு எதிராக தீர்க்கமான போர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு
ஏக்தாநகர்: ஊடுருவல்காரர்களுக்கு எதிராக தீர்க்கமான போர் நடத்த நாடு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சட்டவிரோத குடியேறிகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். 2014ம் ஆண்டு மோடி பிரதமரானது முதல் அக்டோபர் 31 ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. படேலின் 150வது பிறந்த தினமான நேற்று பிரதமர் மோடி குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகர் அருகே உள்ள 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து படேல் சிலை முன்பாக முதன்முறையாக நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார். இதில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் வீரர்கள் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பில் துணை ராணுவப் படைகள் மற்றும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அசாம், திரிபுரா, ஒடிசா, சட்டீஸ்கர், கேரளா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காவல் படைகள் உட்பட அனைத்துப் படைகளுக்கும் பெண் அதிகாரிகள் தலைமை தாங்கினர். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
எனது மிகப்பெரிய மகிழ்ச்சி தேசத்திற்கு சேவை செய்வதில் இருந்து வருகிறது என்று சர்தார் படேல் ஒருமுறை குறிப்பிட்டார். படேலின் மரணத்திற்குப் பிறகு, அடுத்தடுத்த அரசாங்கங்கள் நாட்டின் இறையாண்மை குறித்து அதே தீவிரத்தைக் காட்டவில்லை. காஷ்மீரில் செய்யப்பட்ட தவறுகள், வடகிழக்கில் எழுந்த பிரச்னைகள் மற்றும் நாடு முழுவதும் பரவிய நக்சலைட்-மாவோயிஸ்ட் பயங்கரவாதம் அனைத்தும் நாட்டின் இறையாண்மைக்கு கடுமையான சவால்களாக இருந்தன.
காங்கிரசின் பலவீனமான கொள்கைகள் காரணமாக, காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் வந்தது. இது பின்னர் அரசு ஆதரவு பயங்கரவாதத்திற்கு எரியூட்டின. இதற்கு காஷ்மீரும், நாடும் பெரும் விலையை கொடுத்தன, ஆனால் காங்கிரஸ் எப்போதும் பயங்கரவாதத்திற்கு அடிபணிந்தது. அது சர்தார் படேலின் தொலைநோக்கு பார்வையை மறந்துவிட்டது.
ஆனால் இப்போது 370வது பிரிவின் விலங்குகளை உடைத்து காஷ்மீர் பிரதான நீரோட்டத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இன்று, பாகிஸ்தானும், பயங்கரவாதிகளும் இந்தியாவின் உண்மையான பலம் என்ன என்பதை அறிவார்கள். ஆபரேஷன் சிந்தூரில், யாராவது இந்தியா மீது தீய பார்வையை வைத்தால், அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை ஒழிப்போம் என்பதை உலகம் கண்டது.
இது சர்தார் படேலின் இந்தியா. 2014க்கு முன்பு, நாட்டின் சுமார் 125 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டன. இன்று, அது 11 மாவட்டங்களாகக் குறைந்துவிட்டது. அவற்றில் கூட, நக்சலிசம் மூன்று மாவட்டங்களில் மட்டுமே பரவியுள்ளது. சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவின் ஒற்றுமைக்கும் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். இந்த சட்டவிரோத குடியேறிகள் நமது வளங்களை ஆக்கிரமித்து, மக்கள்தொகை சமநிலையை சீர்குலைத்து, நாட்டின் ஒற்றுமையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
ஆனால் கடந்த கால அரசாங்கங்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே இந்த முக்கியமான பிரச்னையை கவனிக்கவில்லை. ஊடுருவல்காரர்களுக்கு எதிராக ஒரு தீர்க்கமான போரை நடத்த நாடு முடிவு செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் அடையாளம் அச்சுறுத்தப்பட்டால், ஒவ்வொரு குடிமகனும் ஆபத்தில் இருப்பார். இன்று, தேசிய ஒற்றுமை தினத்தில், நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு சட்டவிரோத குடியேறியவரும் வெளியேற்றப்படுவதை உறுதி செய்வோம். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி அடிமை மனநிலையை பெற்றுவிட்டது. நாட்டில் அரசியல் தீண்டாமை ஒரு கலாச்சாரமாக்கப்பட்டது. வந்தே மாதரத்தின் ஒரு பகுதியை மத அடிப்படையில் காங்கிரஸ் அகற்றியது. அது சமூகத்தைப் பிளவுபடுத்தியது.
காங்கிரஸ் வந்தே மாதரத்தின் ஒரு பகுதியை அகற்ற முடிவு செய்த நாளில், அது இந்தியாவின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது. அந்தப் பாவம் செய்யப்படாவிட்டால், இன்றைய இந்தியாவின் படம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்த அணிவகுப்பில் 900 கலைஞர்கள் பங்கேற்ற கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
* உலகின் பழமையான மொழி தமிழ்
பிரதமர் மோடி பேசும் போது,‘இந்தியாவின் ஒற்றுமைக்கு மொழி ஒரு முக்கிய தூண். நாட்டின் நூற்றுக்கணக்கான மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் அதன் திறந்த மற்றும் படைப்பாற்றல் மிக்க சிந்தனையை அடையாளப்படுத்துகின்றன. அதனால்தான் இந்தியா மொழியியல் ரீதியாக மிகவும் வளமான தேசமாக மாறியுள்ளது. பல்வேறு இசை குறிப்புகளைப் போலவே நமது மொழிகளும் நமது அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளன.
ஒவ்வொரு இந்திய மொழியையும் ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் இந்தியாவில் உள்ளது என்று நாங்கள் பெருமையுடன் கூறுகிறோம். சமஸ்கிருதம் போன்ற அறிவுப் புதையல் எங்களிடம் உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் தங்கள் தாய்மொழியில் முன்னேற வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது’ என்றார்.
* முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், நேரு அனுமதிக்கவில்லை
பிரதமர் மோடி பேசும் போது,’ வரலாற்றை எழுதும் நேரத்தை வீணாக்கக்கூடாது, ஆனால் வரலாற்றை உருவாக்க நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்று சர்தார் படேல் நம்பினார். சுதந்திரத்திற்குப் பிறகு, 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் சாத்தியமற்ற பணியை சர்தார் படேல் சாத்தியமாக்கினார்.
ஒரே இந்தியா, சிறந்த இந்தியா என்ற யோசனை படேலுக்கு மிக முக்கியமானது. சர்தார் வல்லபாய் படேல் மற்ற சமஸ்தானங்களை இணைத்தது போல், முழு காஷ்மீரையும் ஒன்றிணைக்க விரும்பினார். ஆனால் நேரு அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதைத் தடுத்தார். இதனால் காஷ்மீர் பிரிக்கப்பட்டது, தனி அரசியலமைப்பு மற்றும் தனி கொடி வழங்கப்பட்டது. காங்கிரசின் இந்த தவறு காரணமாக நம் நாடு பல பத்தாண்டுகளாக பாதிக்கப்பட்டது’ என்றார்.