காஷ்மீரில் இதுவரை 100 முறைக்கு மேல் ஊடுருவிய பாக். தீவிரவாதி சுட்டு கொலை
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 100 முறைக்கு மேல் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் உள்ள குரேஸ் எல்லை பகுதியில் கடந்த 23ம் தேதி பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் எல்லை பகுதியில் நடமாட்டம் காணப்பட்டது. இதையடுத்து சந்தேகத்துக்குரிய ஊடுருவல்காரர்களை நிற்குமாறு கூறினர். ஆனால், அந்த நபர்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். சுட்டு கொல்லப்பட்ட ஒருவரிடம் இருந்து அதிகாரிகள் அடையாள அட்டையை கைப்பற்றினர். அதில் ஒருவர் பாகு கான் என கண்டறியப்பட்டது. அவர் 1995 முதல் 100க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதால் அவரை பல ஆண்டுகளாக பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர். அவர் அனைத்து ஊடுருவல் வழிகளையும் அறிந்திருந்தார். பாதுகாப்பு படையினரிடம் பிடிபடாமல் எளிதாக தப்பித்தும் வந்துள்ளார். இதனால் மனித ஜிபிஎஸ் என்ற பெயர் அவருக்கு வந்தது. கொல்லப்பட்ட 2 பேரும் ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என வட்டாரங்கள் தெரிவித்தன.