தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு
சென்னை: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் உற்சாக வரவேற்று அளித்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதையும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுடன் தொடர்புகொள்வதையும் நோக்கமாகக் கொண்ட 8 நாள் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான ஐரோப்பிய பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 30ம் தேதி தொடங்கினார்.
முதலமைச்சர் நேற்று டசெல்டோர்ஃப் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது, வட ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தின் முதலமைச்சர் ஹென்ட்ரிக் வூஸ்ட் சார்பாக, அவருடைய அரசின் தூதரக விவகாரங்கள் மற்றும் அரசுமுறை வரவேற்புப் பிரிவின் அன்யா டி வூஸ்ட், பெர்லினில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அபிஷேக் துபே மற்றும் ஃபிராங்க்பர்ட்டில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பொறுப்புத் துணைத் தூதர் விபா காந்த் ஷர்மா ஆகியோர் அவரை அன்புடன் வரவேற்றனர். டசெல்டோர்ஃப் விமான நிலையத்திற்கு வந்தடைந்தவுடன், நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், சமூகத் தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் மலர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு, தமிழ்நாட்டின் உலகளாவிய கலாசாரப் பெருமையையும், ஓர் அரசியல் தலைவராக முதலமைச்சருக்கு சர்வதேச மதிப்பையும் பறைசாற்றியது.
ஜெர்மனியில் அவரது பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று முதலமைச்சர் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொள்ளும் மாபெரும் அயலக தமிழர்கள் நிகழ்ச்சியில் தலைமை ஏற்றார். இந்நிகழ்ச்சியில் ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும், தமிழ் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும், தமிழ்நாட்டின் சிறப்பினை வெளிநாட்டுகளில் மேம்படுத்துவதற்கும் பங்களித்த ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல தமிழ்ச் சங்கங்களை முதலமைச்சர் கவுரவித்தனர். இன்று முதலமைச்சர் டசெல்டோர்ஃபில் உயர்நிலை முதலீட்டாளர் மாநாட்டிற்கு தலைமை ஏற்று, உலகளாவிய முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்வின் போது முக்கிய முதலீட்டு அறிவிப்புகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் முதலீடு செய்யவும், தங்கள் தொழில் திட்டங்களை விரிவுபடுத்தவும் விரும்பும் முக்கிய முதலீட்டாளர்களை முதலமைச்சர் தனியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலமான தமிழ்நாட்டிற்கும், ஜெர்மனியின் மிகவும் தொழில்மயமான மாகாணமான வட ரைன்-வெஸ்ட்பாலியாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக, வட ரைன்-வெஸ்ட்பாலியா மாகாண முதலமைச்சர் ஹென்ட்ரிக் வூஸ்ட் உடன் முதலமைச்சர் சந்திப்பு நடத்த உள்ளார். ஜெர்மனி பயணத்திற்குப் பின், முதலமைச்சர் இங்கிலாந்துக்குச் சென்று, அங்கும் முதலீட்டாளர்கள் சந்திப்புகள், தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
தமிழர்களின் பாசத்திற்கு வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ‘வணக்கம் ஜெர்மனி! இங்குள்ள என் தமிழ் உறவுகளின் அன்பால் நெகிழ்ந்து, தமிழ்நாட்டின் வலிமைகளை உலகறியச் செய்யவும், முதலீடுகளை ஈர்க்கவும், வளமான எதிர்காலத்திற்கான புதிய கூட்டாண்மைகளை உருவாக்கவும் பெருமிதத்துடன் இப்பணியைத் தொடங்குகிறேன்’ என்று கூறியுள்ளார்.