சிந்து நதி நீரை நிறுத்தினால் இந்தியாவுக்கு உரிய பாடம் கற்பிக்கப்படும்: பாக். பிரதமர் சொல்கிறார்
புதுடெல்லி: சிந்து நதி நீரை நிறுத்தினால் இந்தியாவுக்கு உரிய பாடம் கற்பிக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மிரட்டி உள்ளார். காஷ்மீர் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து பதிலடியாக இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் தண்ணீர் இல்லாமல் பாகிஸ்தான் அவதிப்பட்டு வருகிறது. எனவே சிந்து நதி ஒப்பந்தம் அடிப்படையில் தண்ணீர் வழங்கும்படி பாக். ராணுவ தளபதி அசிம் முனீர், பாக். அதிபர் சர்தார்ஜியின் மகன் பிலாவல் பூட்டோ உள்ளிட்டோர் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்தனர்.
அந்த வரிசையில் பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு விழாவில் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது: சிந்து நதி நீர் ஒப்பந்தம் பாகிஸ்தானின் உயிர்நாடி. மேலும் சர்வதேச ஒப்பந்தங்களின் கீழ் பாகிஸ்தானின் உரிமைகளில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் இந்தியா செயல்படுத்த வேண்டும்.
எங்கள் தண்ணீரை நீங்கள் பிடித்துக் கொள்வதாக அச்சுறுத்தினால், பாகிஸ்தானுக்கு உரிய ஒரு சொட்டு தண்ணீரை கூட நீங்கள் பறிக்க முடியாது என்பதை மனதில் கொள்ளுங்கள் என்று எதிரியிடம் சொல்ல விரும்புகிறேன். எங்கள் தண்ணீரை நிறுத்துவதாக நீங்கள் மிரட்டுகிறீர்கள். நீங்கள் அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால், பாகிஸ்தான் உங்களுக்கு ஒருபோதும் மறக்க முடியாத அளவுக்கு பாடம் கற்பிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.