இந்தோனேஷியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம் 65 மாணவர்கள் உயிருடன் புதைந்தனர்
சிடோயர்ஜோ: இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ நகரில் ‘அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இருந்த பழைய இரண்டு மாடிக் கட்டிடத்தில், அனுமதியின்றி கூடுதலாக சில தளங்கள் கட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, கூடுதல் தளங்களின் பாரம் தாங்காமல் அந்தக் கட்டிடம் திடீரென இடிந்து தரைமட்டமானது.
அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இரவு முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்; 99 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 65 மாணவர்கள் இடிபாடுகளுக்குள் உயிருடன் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தினால் மேலும் சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால், மீட்புப் பணிகள் மிகுந்த சவாலாக உள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மாணவர்களுக்கு குழாய்கள் மூலம் ஆக்சிஜன் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.