இந்தோனேஷியாவில் இந்தியர் உட்பட 8 பேருடன் ஹெலிகாப்டர் மாயம்
ஜகர்தா: இந்தோனேஷியாவின் தெற்கு கலிமந்தன் மாகாணத்தில் உள்ள கோட்டாபரு மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஈஸ்டிண்டோ ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஒன்று திங்களன்று பலங்காராயா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 8 பேர் இருந்தனர்.
இந்த பயணிகளில் இந்தியரான சாந்தகுமாரும் ஒருவர். போர்னியோ காட்டுப்பகுதியில் சென்றபோது ஹெலிகாப்டர் மாயமானதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து காவல்துறை, ராணுவம் மற்றும் உள்ளூர் மீட்பு குழுவினர் என சுமார் 140 பேர் இணைந்து ஹெலிகாப்டரை தீவிரமாக தேடி வருகின்றனர். இன்னும் ஹெலிகாப்டரை கண்டறிய முடியவில்லை. இரண்டாவது நாளாக நேற்றும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே புகையை கக்கியபடி ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து சென்றதை பார்த்ததாக ஒரு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காடு வழியாக மலையின் மறுபக்கத்தில் ஹெலிகாப்டரை தேடும் பணி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விபத்து நிகழ்ந்த இடத்தில் வான்வழியாக ஆய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் கனமழை காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.