தனிநபரிடம் இருந்து வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அதிகரிப்பு: என்பிசிஐ அறிவிப்பு
டெல்லி: தனிநபரிடம் இருந்து வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வரம்பு அதிகரிப்பதாக என்பிசிஐ அறிவித்துள்ளது. என்பிசிஐ எனப்படும் இந்திய தேசிய கட்டணம் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், யுபிஐ பரிவர்த்தனைகளின் வரம்பு அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி தனிநபரிடம் இருந்து வணிகம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மூலதன சந்தையில் முதலீடு செய்தல், காப்பீட்டு பிரீமியம், பயண முன்பதிவுக்கு ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் செலுத்த முடியும் என்றும், ரூ.10 லட்சம் வரையிலான அதிகபட்ச பரிவர்த்தனையை 24 மணி நேரத்தில் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவதற்கான வரம்பு ஓரு நாளில் அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை செலுத்தலாம் என்றும், கடன் மற்றும் மாதத் தவணைக்கான வரம்பு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நகைகளை வாங்க யுபிஐ மூலம் பயனர்கள் ஒரு நாளைக்கு ரூ.6 லட்சம் செலுத்த முடியும் என்றும் வங்கி டெபாசிட், கால வைப்புக்கான வரம்பு பரிவர்த்தனை ரூ .5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, வணிகர்களுக்கும் பயனளிக்கும் என குறிப்பிட்டுள்ள என்பிசிஐ, தனிநபரிடம் இருந்து பரிவர்த்தனைகளுக்கான வரம்பு, முன்பு போலவே நாளென்றுக்கு ரூ.1 லட்சமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை 15.09.2025 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.