பிரிவினைவாதிகளை வௌியேற்ற இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப.சிதம்பரம் பேச்சால் சர்ச்சை
சிம்லா: இமாச்சலபிரதேசம் கசவுலியில், குஷ்வந்த் சிங் இலக்கிய விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், இந்திரா காந்தி படுகொலை பற்றி நூல் வௌியிட்டு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பங்கேற்றுபேசுகையில், “1984ம் ஆண்டு பொற்கோயிலுக்குள் இருந்த சீக்கிய பிரிவினைவாதிகளை வௌியேற்ற, பிடிக்க பிரதமர் இந்திரா காந்தி எடுத்த ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறானது. அந்த தவறுக்காக இந்திரா காந்தி தன் உயிரையே விலையாக கொடுத்தார்.
ஆனால், இந்த தவறில் ராணுவம், உளவுத்துறை, காவல்துறை மற்றும் குடிமை பணியாளர்களின் பங்கும் உள்ளது” என கருத்து தெரிவித்திருந்தார். “காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது. மேலும், இவ்வாறு கருத்து தெரிவிப்பது ஒரு வழக்கமாக மாறி விடக்கூடாது” என காங்கிரஸ் தலைமை கருதுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தன் எக்ஸ் பதிவில், “ப.சிதம்பரம் காங்கிரஸ் செய்த தவறுகளை மிகவும் தாமதமாக ஒப்பு கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.