இன்டிகோ விமானச் சேவை ரத்து: மணமக்கள் இல்லாமல் நடைபெற்ற திருமண வரவேற்பு: ஆன்லைனில் பங்கேற்று ஆசிபெற்ற புதுமண தம்பதி
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியைச் சேர்ந்த மேகா க்ஷீரா சாகர் மற்றும் ஒடிசாவின் புவனேஸ்வரைச் சேர்ந்த சங்கிராம் தாஸ் ஆகிய இருவரும் கடந்த நவம்பர் 23ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். டிசம்பர் 3ம் தேதி மணமகளின் சொந்த ஊரான ஹூப்பள்ளியில் வரவேற்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. ஹூப்பள்ளியில் உள்ள குஜராத் பவனில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. டிசம்பர் 2ம் தேதியன்று மணமக்கள் இருவருக்கும் புவனேஸ்வரிலிருந்து பெங்களூருவிற்கும், அங்கிருந்து ஹூப்பள்ளிக்கும் விமானத்தில் முன்பதிவு செய்திருந்தனர். புவனேஸ்வரிலிருந்து மும்பைக்கும், அங்கிருந்து ஹூப்பள்ளிக்கும் சில உறவினர்களுக்கு விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன.
ஆனால், டிசம்பர் 2ம் தேதி காலை 9 மணி முதல் மறுநாள் (டிசம்பர் 3ம் தேதி) அதிகாலை வரை 4-5 மணி வரை விமானம் தாமதமானதாகக் கூறிய இன்டிகோ ஊழியர்கள், பின்னர் விமானம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறினர். அதனால் மணமக்கள் ஹூப்பளிக்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் புவனேஸ்வரில் இருந்தபடியே வீடியோ காலில் கலந்துகொள்ள, ஹூப்பள்ளியில் உறவினர்கள் இருந்தபடி வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. ஹூப்பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்த மேடையில், மணமக்களுக்குப் பதிலாக மணமகளின் பெற்றோர் அமரவைக்கப்பட்டு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இன்டிகோ விமான சேவை ரத்தால் திருமண வரவேற்பு நிகழ்வில் மணமக்களே கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.