7வது நாளாக தொடரும் துயரம் 71 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து: டிக்கெட்களை ரத்து செய்து வேறு விமானங்களில் பயணம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 7வது நாளாக 71 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களின் சேவைகளில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, நேற்று 7வது நாளாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரையில் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் 38, வருகை விமானங்கள் 33 என மொத்தம் 71 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், புவனேஸ்வர், பாட்னா, ஜெய்ப்பூர், கோவை மற்றும் சர்வதேச விமானமான சிங்கப்பூர் உள்ளிட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் சேவைகள் வரும் 10ம் தேதி தொடங்கி, 15ம் தேதி வரையில் படிப்படியாக ரத்து எண்ணிக்கை குறைந்து, 15ம் தேதியில் இருந்து வழக்கமான நிலைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
வருகிற 15ம் தேதி வரை இதே நிலை என்றால் பயணிகளுக்கு அது மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்து இருந்த பயணிகள் பெரும்பாலானோர், தங்கள் விமான டிக்கெட்களை ரத்து செய்து, வேறு விமானங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். ஆனால் பயணிகள் டிக்கெட்களை ரத்து செய்யும்போது, அந்த பணம் பயணிகளுக்கு உடனடியாக ரீபண்ட் ஆகி, அவர்களுடைய வங்கி கணக்கில் வந்துவிடும் என்று கூறுகின்றனர். அதுபோல் பெரும்பாலான பயணிகளுக்கு வங்கி கணக்கில் ரீபண்ட் வராமல் தாமதமாவதாகவும் பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.