பார்வையற்றோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டம் வென்று அசத்திய இந்திய அணிக்கு முதல்வர், பிரதமர் பாராட்டு
கொழும்பு: இலங்கையில் நடந்த, பார்வையற்றோருக்கான, முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கையின் கொழும்பு நகரில் பார்வையற்ற மகளிருக்கான முதல் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் நேபாளம் அணியுடன் இந்திய மகளிர் அணி மோதியது. முதலில் ஆடிய நேபாளம் 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 114 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, 12.1 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 117 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், உலக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘துணிவு வழிநடத்தும்போது வரலாறு உருவாகிறது. டி20 கோப்பையை வென்ற, பார்வையற்றோருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘பார்வையற்றோருக்கான மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த தொடர் முழுவதும் வெல்ல முடியாத அணியாக இந்திய அணி திகழ்ந்தது பாராட்டுக்கு உரியது. வரலாற்று சிறப்பு வாய்ந்த சாதனையை நமது மகளிர் அணியினர் அரங்கேற்றி உள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.