இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வரும் தகுதி கில்லிடம் உள்ளது: முன்னாள் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் கணிப்பு
கேப்டன் கில் ஒரு இரட்டைசதம், 2 சதம் என 607 ரன் குவித்து டாப்பில் உள்ளார். அவரின் கேப்டன்ஷிப் செயல்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆலோசகருமான தென்ஆப்ரிக்காவைச் சேர்ந்த கேரி கிரிஸ்டன், சுப்மன் கில்லின் கேப்டன்சி செயல்பாடு பற்றி அளித்துள்ள பேட்டி:
சுப்மன் கில்லின் கேப்டன்சியை தற்போதே மதிப்பிடுவது மிகவும் தவறான செயல். ஏனென்றால் சுப்மன் கில் 3 போட்டிகளில் மட்டுமே இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறார். இந்த 3 போட்டியிலேயே கில் தனது திறமையை நிரூபித்துவிட்டார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், திட்டம், எதிரணியின் பலம், பலவீனம் என்று கேப்டன்சி என்பது பல்வேறு விஷயங்களைச் சார்ந்த ஒன்று. கில்லிடம் கிரிக்கெட் பற்றிய சிறந்த கற்றல் இருக்கிறது. களத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே இருப்பார். சிறந்த பேட்ஸ்மேனும் கூட. கேப்டனாக வெல்ல வேண்டுமென்றால், பல்வேறு விஷயங்களில் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
குறிப்பாக வீரர்களை பயன்படுத்துவதில் நிபுணராக இருக்க வேண்டும். அதுதான் தலைமைக்கான முக்கிய பண்பு. என்னைப் பொறுத்தவரை டோனி அதில் வல்லவர். டோனி அளவிற்கு சுப்மன் கில்லால் வீரர்களை கையாள தெரிந்தால்,
அட்டகாசமாக இருக்கும். இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வருவதற்கான அத்தனை தகுதிகளும் சுப்மன் கில்லிடம் இருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.