3 ஒன்டே, 5 டி.20 போட்டியில் பங்கேற்பு; இந்திய கிரிக்கெட் அணி ஆஸி. புறப்பட்டது: பெர்த்தில் 19ம் தேதி முதல் ஒருநாள் போட்டியில் மோதல்
புதுடெல்லி: வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதலில் ஒருநாள் போட்டி தொடர் நடக்கிறது. முதல் போட்டி வரும் 19ம் தேதி பெர்த்தில் நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் தலைமையில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எவ்வாறு செயல்பட போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரோகித்சர்மா, விராட் கோஹ்லி சுமார் 8 மாதங்களுக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் களம் இறங்க உள்ளனர்.
38 வயதான ரோகித் சர்மாவும், 36 வயதை தாண்டிய விராட் கோஹ்லியும் ஏற்கனவே டெஸ்ட்,டி.20 போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் ஒருநாள் போட்டியில் கடைசி கட்டத்தில் உள்ளனர். இருவரும் உடற்தகுதியுடன் சிறப்பான பார்மில் இருந்தால் தான் அணியில் நீடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டது. இதற்காக கோஹ்லி, ரோகித்சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்களில் டெல்லியில் இந்திய அணியுடன் நேற்றே இணைந்தனர். இன்று காலை ஒரு குழுவினர் ஆஸ்திரேலியா புறப்பட்டனர். மற்றொரு குழுவினர் மாலையில் புறப்படுகின்றனர்.
நாளை மறுநாள் முதல் பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்குகின்றனர். டி.20 தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ள கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே,சஞ்சு சாம்சன்,ரிங்குசிங், திலக்வர்மா, ஜித்தேஷ் சர்மா உள்ளிட்ட வீரர்கள் ஓரிரு நாட்களில் ஆஸி. புறப்படுவார்கள் என தெரிகிறது.
3 ஆஸி. வீரர்கள் விலகல்;
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள ஜோஷ் இங்கிலீஸ் காயம் காரணமாகவும், சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா, சொந்த காரணத்திற்காகவும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஆஷஸ் தொடருக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக உள்ளூர் போட்டியில் ஆடுவதாலும், முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இதையடுத்து மேத்யூ குஹ்னேமன் மற்றும் ஜோஷ் பிலிப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.