24 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை திடீர் சரிவு
புதுடெல்லி: கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத வகையில், அமெரிக்காவிற்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்காவிற்கு அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எல்லைகளைப் பகிரும் மெக்சிகோ மற்றும் கனடாவைத் தவிர்த்தால், இங்கிலாந்திற்கு அடுத்தபடியாக இந்தியாதான் அமெரிக்காவிற்கு அதிக பயணிகளை அனுப்பும் இரண்டாவது பெரிய நாடாகும். பிரேசில் அடுத்த இடத்தில் உள்ளது. வழக்கமாக, மாணவர்கள், தொழில்முறை வல்லுநர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திக்கச் செல்பவர்களே இந்தியப் பயணிகளில் பெரும்பான்மையாக உள்ளனர்.
இந்த ஐந்து நாடுகள்தான், அமெரிக்காவிற்கு வரும் பன்னாட்டுப் பயணிகளில் சுமார் 60 விழுக்காட்டினரைப் பங்களிக்கின்றன. இந்நிலையில், 2001ம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக, அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது பெருமளவில் குறைந்துள்ளது. அமெரிக்க வர்த்தகத் துறையின் தேசிய பயணம் மற்றும் சுற்றுலா அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 2.1 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவிற்குப் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.3 லட்சமாக இருந்தது. இது சுமார் 8 விழுக்காடு சரிவாகும்.
இந்தச் சரிவு இந்தியாவிற்கு மட்டுமல்லாது, உலகளாவிய போக்காகவே உள்ளது. அமெரிக்காவிற்கு வரும் ஒட்டுமொத்த பன்னாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையும் ஜூன் மாதத்தில் 6.2 சதவீதம் குறைந்துள்ளது. இந்தத் தற்போதைய சரிவு மாணவர்களிடையேதான் அதிகமாகக் காணப்படுவதாகவும், விசா வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், பயணிகளின் எண்ணிக்கை மேலும் சரியக்கூடும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதுமட்டுமின்றி இந்தியாவுக்கு எதிரான 50% வரிவிதிப்பு உள்ளிட்ட காரணங்களும் அமெரிக்கா மீதான ஈர்ப்பு இந்தியர்கள் மத்தியில் நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.