இந்தியர்கள் அனைவருக்கும் 40,000 ஆண்டுகளாக ஒரே டிஎன்ஏ தான்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் புது விளக்கம்
புதுடெல்லி: ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதன் சித்தாந்தங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நாடு முழுவதும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய கொள்கையான ‘இந்து ராஷ்டிரா’ என்பது, ஒரு குறிப்பிட்ட மதத்தை மையமாகக் கொண்ட அரசியல் ஆட்சியை அமைக்கும் முயற்சி என்ற விமர்சனம் பரவலாக முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற ‘சங்கத்தின் 100 ஆண்டுகால பயணம்’ என்ற சொற்பொழிவுத் தொடரின் விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், ‘இந்து ராஷ்டிரா என்று கூறும்போது, சிலர் அதை அரசியல் அதிகாரத்துடனோ அல்லது ஆட்சியுடனோ தொடர்புபடுத்துகிறார்கள். இது முற்றிலும் தவறான புரிதலாகும்.
இந்தியாவின் தேசிய உணர்வு என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருப்பது; அது ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்பதைச் சார்ந்தது அல்ல. இந்து ராஷ்டிரா என்பது பாகுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்குவதாகும். கடந்த 40,000 ஆண்டுகளாக இந்த நிலத்தில் வாழும் மக்களின் டி.என்.ஏ ஒன்றாகவே உள்ளது. ‘ஹிந்த்வி’, ‘பாரதீய’, ‘சனாதனம்’ ஆகியவை வெறும் சொற்கள் அல்ல; அவை நமது நாகரிகத்தின் அடையாளம். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் நோக்கமே ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் ஒருங்கிணைப்பதாக இருந்தது. ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு நோக்கம் உள்ளது. இந்தியாவின் நோக்கம் உலகிற்கே வழிகாட்டும் ‘விஸ்வகுரு’ ஆவதுதான். அது சுயநலத்திற்காக அல்ல; உலகில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பரப்புவதற்கே’ என்றார்.