போலி வேலைவாய்ப்பு, ஆள் கடத்தல் சம்பவத்தால் இந்தியர்களுக்கு ஈரான் விசா சலுகை ரத்து: ஒன்றிய அரசு கடும் எச்சரிக்கை
புதுடெல்லி: போலி வேலைவாய்ப்பு மோசடிகள் மற்றும் ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லா பயண சலுகையை ஈரான் ரத்து செய்துள்ளது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இந்தியர்கள் ஈரான் நாட்டிற்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் சலுகை முன்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சலுகையை குற்றக் கும்பல்கள் தவறாகப் பயன்படுத்தி வந்தது சமீபத்தில் தெரியவந்தது. குறிப்பாக, இந்தியர்களுக்கு போலி வேலைவாய்ப்பு மற்றும் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசைவார்த்தை கூறி, அவர்களை ஈரான் அழைத்துச் சென்று, பின்னர் கடத்தி வைத்துப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்தன.
இதன் காரணமாக, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான விசா இல்லா பயண சலுகையை ரத்து செய்வதாக ஈரான் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு, வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள், ஈரானுக்குள் நுழையவோ அல்லது ஈரான் வழியாக வேறு நாடுகளுக்குப் பயணம் செய்யவோ இனி கட்டாயமாக முன்கூட்டியே விசா பெற வேண்டும். இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தலில், ‘விசா இல்லாமல் ஈரான் செல்லலாம் என உறுதியளிக்கும் இடைத்தரகர்களிடம் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ அரசு வழிகள் மூலம் சரிபார்க்க வேண்டும். ஈரானுக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்கள், பயணிகளின் விசாக்களைச் சரிபார்த்த பின்னரே அவர்களை விமானத்தில் ஏற்ற வேண்டும். விசா இல்லாத பயணிகளை அனுமதிக்கக் கூடாது’ என்று கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளன.