நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் கை குலுக்கவில்லை என கூறி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பாகிஸ்தான் அணி முறையீடு
துபாய்: ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது.
இந்த போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்த நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்றைய போட்டியின்போது டாஸ் முடிந்த உடன் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டனுடன் கை குலுக்கவில்லை. அதேபோல் போட்டி முடிந்த பின்பும் எதிரணி வீரர்களுடன் கை குழுக்கமால் இந்திய வீரர்கள் தங்களின் ஓய்வறைக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையிட்டுள்ளது. "இன்றைய போட்டியில் விளையாட்டு அறம் இல்லாமல் போனது மிகவும் ஏமாற்றத்துக்குரியது. விளையாட்டில் அரசியலை கொண்டு வருவது, போட்டியின் உணர்வுக்கு நேர் எதிரானது. இனி வரும் காலங்களிலாவது, வெற்றி பெறும் அணிகள் பண்புடன் கொண்டாட வேண்டும்" என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையிட்டுள்ளது.