இந்திய பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல்; அடுத்தடுத்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு ஒன்றிய அமைச்சர் பாராட்டு
புவனேஸ்வர்:அக்னி-5 ஏவுகணை சோதனையின் வெற்றியை தொடர்ந்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பையும் இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்து தனது வலிமையை பறைசாட்டி உள்ளது. ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனைத் தளத்தில் இருந்து அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னி-5 இடைநிலை ஏவுகணை கடந்த 20ம் தேதி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்தச் சோதனை, ராணுவத்தின் வியூகப் படைகள் கட்டளையின் கீழ் நடத்தப்பட்டு, அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்களையும் உறுதி செய்தது.
இந்த அக்னி-5 ஏவுகணை 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது என்றாலும், அதன் தாக்குதல் வரம்பை 7,500 கிலோமீட்டர் வரை நீட்டிக்கும் மேம்படுத்தப்பட்ட பதிப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கி வருகிறது. இந்த வெற்றிச் செய்தியை தொடர்ந்து நேற்று மதியம் 12.30 மணியளவில், ஒடிசா கடற்கரையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விரைவு எதிர்வினை தரையிலிருந்து வான் நோக்கிச் செல்லும் ஏவுகணை, மேம்பட்ட மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் உயர் சக்தி லேசர் அடிப்படையிலான ஆற்றல் ஆயுதம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘தனித்துவமான இந்த சோதனை, நமது நாட்டின் அடுக்கு வான் பாதுகாப்புத் திறனை நிலைநிறுத்தியுள்ளதுடன், எதிரிகளின் வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராக முக்கிய இடங்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தப் போகிறது’ என்றும் கூறியுள்ளார்.
பரந்த அளவிலான வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில், ரேடார், ஏவுகணைகள், இலக்கு மற்றும் வழிகாட்டுதல் அமைப்புகள் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அலகுகள் ஆகியவை இணைந்து செயல்பட்டு விரிவான வான் பாதுகாப்பை வழங்குகின்றன. அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட இந்த வெற்றிகரமான சோதனைகள், இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் திறன்களையும், தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்த மேம்பட்ட ஆயுத அமைப்புகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கும் திறனையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.