இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலக சாம்பியன்: பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து
சென்னை: மகளிர் உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இந்திய அணிக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்! இறுதிப்போட்டியில் வீராங்கனைகள் காட்டிய நுணுக்கம், தண்னம்பிக்கை, பாராட்டுக்குரியது. உலக கோப்பை முழு தொடரிலும் இந்திய வீராங்கனைகள் ஒருமித்த ஒத்துழைப்பு சிறப்பாக எதிரொலித்தது. எதிர்கால பெண் வீராங்கனைகளுக்கும் ஊக்கம் தரும் வெற்றியை இந்திய மகளிர் அணி நிகழ்த்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; நமது பெண்கள் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்று, இந்தியா கிரிக்கெட் உலகை ஆழ்கிறது. இந்திய அணியின் ஒருமித்த செயல்பாடே இந்த வெற்றிக்கு காரணம் இந்திய அணியின் இந்த அபாரமான வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது திறமை, மன உறுதியின் அற்புதமான வெளிப்பாடு. இந்த வெற்றி, தலைமுறை தலைமுறையாகப் பல இளம் வீராங்கனைகள் பெரிய கனவுகளைக் காணவும், துணிச்சலுடன் விளையாடவும் ஊக்கமளிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; “இன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நமது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. உங்கள் மன உறுதி, உறுதிப்பாடு மற்றும் குழு மனப்பான்மை நமது நாட்டிற்கு மகத்தான பெருமையை கொண்டு வந்துள்ளது. இந்த வெற்றி வெறும் களத்தில் கிடைத்த வெற்றி மட்டுமல்ல – நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான இளம் பெண்கள் பெரிய கனவுகளைக் காணவும், நம்பிக்கையுடன் தங்கள் இலக்குகளைத் துரத்தவும் இது ஒரு உத்வேகமாகும். சபாஷ், சாம்பியன்ஸ்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.