முதல் ஒரு நாள் போட்டி; இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி: தீப்தி சிறப்பான ஆட்டம்
சவுத்தாம்டன்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த 5 போட்டி கொண்ட டி.20 தொடரை 3-2 என இந்தியா கைப்பற்றியது. தொடர்ந்து 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் சவுத்தாம்டனில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 258 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சோபியா டங்க்லி 83, ஆலிஸ் டேவிட்சன்-ரிச்சர்ட்ஸ் 53, கேப்டன் நாட் ஸ்கைவர்-பிரண்ட் 41 ரன் எடுத்தனர். இந்திய பவுலிங்கில் கிராந்தி கவுட், சினே ரானா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 259 ரன் இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 28, பிரதிகா ராவல் 36 ரன் எடுத்து அவுட் ஆகினர். பின்னர் வந்த ஹர்லீன் தியோல் 27, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 17 ரன்னில் வெளியேற ஜெமிமா ரோட்ரிக்ஸ் 48, ரிச்சா கோஷ் 10 ரன் அடித்தனர். தீப்தி சர்மா நாட் அவுட்டாக 64 பந்தில் 62 ரன், அமன்ஜோத் கவுர் 20 ரன் (14பந்து) அடித்தனர். 48.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன் எடுத்த இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீப்தி சர்மா ஆட்டநாயகி விருது பெற்றார். 2வது ஒருநாள் போட்டி லீட்சில் வரும் 19ம்தேதி நடக்கிறது.