கண்ணகி நகரை பிராண்டாக்கிட்டோம்: பஹ்ரைனில் தங்கம் வென்ற இந்திய துணை கேப்டன் கார்த்திகா பேட்டி
சென்னை: பஹ்ரைனில் நடந்த யூத் ஏசியன் கேம்ஸ் கபடிப் போட்டியில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக விளையாடி தங்கப் பதக்கம் வென்று திரும்பிய சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கார்த்திகாவுக்கு தமிழ்நாடு சார்பில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. பிரமாண்ட வரவேற்புடன் வீடு திரும்பிய கார்த்திகா, தனது வெற்றி, போராட்டங்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மனம் திறந்து பேசினார்.
கபடியில் எப்போது ஆர்வம் வந்தது?
கார்த்திகா: நான் 8ம் வகுப்பு படிக்கும்போது கபடியை தொடங்கினேன். கண்ணகி நகரில் எங்க பயிற்சியாளர் ராஜ் சாரும் சீனியர்ஸ் எல்லாம் விளையாடி, கோப்பைகளையும் மெடல்களையும் வெல்றதை பார்த்துதான் எனக்கு கபடியில் ஆர்வம் வந்தது. கோச் ராஜ் சாரோட பயிற்சி, உந்துதல் மற்றும் தினசரி கடின உழைப்பு மூலம்தான் நான் இப்போ இந்தியாவுக்காக விளையாடி இருக்கேன்.
உங்கள் வெற்றிக்கு யார் காரணம் என்று சொல்வீர்கள்?
கார்த்திகா: எனக்கு எந்த ஸ்ட்ரகலுமே கிடையாது. எங்க கோச் அப்படிப் பார்த்துக்கிட்டாரு. என் வெற்றிக்குக் காரணம் என் கோச் மட்டும்தான்.
* பயிற்சியாளர் ராஜ்: கார்த்திகா ஒரு கடின உழைப்பாளி. ஸ்கூலுக்கு மிகவும் குறைவாகவே போனாள். 10ம் வகுப்பு தேர்வைக்கூட தவிர்த்துட்டு தேசியப் போட்டிகளுக்குப் போனாள். இந்த வயசுல இத்தனை உழைப்பு இருந்ததால தான் இன்னிக்கு சாதிக்க முடிஞ்சுது.
* கார்த்திகாவின் தாயார் சரண்யா: கல்வியைப் போலவே குழந்தைகளுக்கு உடல் பலமும் மன பலமும் தேவை. அதனால நான் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். 10ம் வகுப்புத் தேர்வைக்கூட தவிர்த்து தேசியப் போட்டிக்குப் போனப்போ, நான் கோபப்படல. அவளோட விருப்பத்திற்கே விட்டுட்டேன்.
பஹ்ரைனில் விளையாடிய அனுபவம் எப்படி இருந்தது?
கார்த்திகா: அது வேற நாட்டுல விளையாடற மாதிரி ஒரு உணர்வையே எனக்கு தரல. ஏன்னா அங்க கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் தமிழ் மக்கள்தான் இருந்தாங்க. அங்க ‘இந்தியா’னு பேரு ஒலிச்சதைவிட, என்னோட பேரான ‘கார்த்திகா’ மற்றும் ‘கண்ணகி நகர்’னு பேரு தான் அதிகமாக ஒலிச்சுது.
கண்ணகி நகரை உலகமெங்கும் பரவச் செய்து, அதை ஒரு பிராண்டா மாத்திட்டோம்னு நான் பெருமையா சொல்றேன். நம்ம கண்ணகி நகர் மக்களுக்காகத்தான் நம்ம எல்லாமே மாத்தணும்னு நினைச்சு எல்லாத்தையும் பண்ணிட்டு இருந்தோம்.
* பயிற்சியாளர் ராஜ்: எங்களுக்கு ஜாதி ரீதியாகவும், கண்ணகி நகர்னு காரணத்தினாலேயும் நிறைய பாகுபாடுகள் இருந்திருக்கு. வேலைக்கோ, செக்யூரிட்டி வேலைக்கோ போறப்போ, ``நீங்க கண்ணகி நகர் ஆதார் கார்டு இல்லாம வேற ஏதாவது ஊரு ஆதார் கார்டு எடுத்துட்டு வாங்க, அப்போ உங்களை சேர்த்துக்கிறேன்”னு சொல்வாங்க. அருகில உள்ள கல்லூரிகளில் சேரும்போதும், ``கண்ணகி நகர் பசங்க வேணாம்”னு ஒதுக்குவாங்க.
இதனால, கண்ணகி நகர்னு வெளியிலே சொல்றதுக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்துச்சு. ஆனா உண்மையோ வேறு. அந்த ஏரியா சுத்தமா இருக்கு, மக்கள் முதிர்ச்சியா பேசுறாங்க, டீசண்டா இருக்காங்க. சமீபத்தில குரூப் 4 தேர்வில் பலர் பாஸ் ஆகியிருக்காங்க, நிறைய விளையாட்டு திறமைகள் இருக்கு. ஆண், பெண்னு இருபாலாரும் சாதிக்கிறாங்க.
``நீங்க நெகட்டிவ் சொல்லிக்கிட்டே இருங்க, எங்களோட பாசிட்டிவ் அம்சங்களை நாங்க காட்டிக்கிட்டே இருக்கிறோம்”னு மனநிலையில தான் நாங்க செயல்படுறோம்.
கார்த்திகா: இந்த கோளை அடையறதுக்காகவே கண்ணகி நகரில இருந்து வர்றோம்னு எண்ணத்தை மனசுல வெச்சு எங்க கோச் எனக்கு பயிற்சி அளிச்சாரு.
* கார்த்திகாவின் தந்தை: படி.. படிப்பும் இருக்கணும், விளையாட்டும் இருக்கணும். ஸ்போர்ட்ஸில் நீ எதில் மெயின் ஆகிறாயோ, அது உனக்கு பெஸ்ட்னு நான் கார்த்திகாவுக்கு சொன்னேன். விளையாட்டில் இந்த அளவுக்கு பெரிய நிலைக்கு வருவாள்னு நான் எதிர்பார்க்கல. கோச் நல்ல பயிற்சி அளிச்சாரு.
பெண் பிள்ளைகளை விளையாட அனுப்புவது குறித்து பெற்றோர்களுக்கு என்ன சொல்வீர்கள்?
தந்தை: எல்லாப் பெண் பிள்ளைகளையும், ``அதுபோல வேணாம், இது போல இந்த விதம் எல்லாம் பண்ணாத, இது பண்ணாத”னு
சொல்ல வேணாம். ப்ரீயாக விடுங்கள். எல்லாம் நல்ல கரெக்டா நடக்கணும். எந்த விஷயத்தில் ப்ரீயா விடுங்களோ, அந்த விஷயத்தில் ப்ரீயாக விடுங்கள்.
தாயார்: பெண் பிள்ளைகளை, குறிப்பா கபடி மாதிரி விளையாட்டுகளுக்கு அனுப்பும்போது அடிபட்டுடும்னு பயப்படுறது இயல்பு. ஆனாலும், பெண் குழந்தைகள் துணிந்து வரணும்னு நான் வெளியே விளையாட அனுப்பினேன். இப்போ எங்க மகள் ஒரு விதை தூவி இருக்காள்.
உங்களுடைய அடுத்த இலக்கு என்ன?
கார்த்திகா: இந்திய அணியோட அடுத்த இந்தியன் கேப்டன் ஆகணும். அதுதான் என் குறிக்கோள்.
பயிற்சியாளர் ராஜ்: 2030ல் அகமதாபாத்தில் நடக்கப்போற காமன்வெல்த் கேம்ஸில் கபடி சேர்க்கப்பட்டிருக்கு. அதேபோல 2036ல ஒலிம்பிக்கில் கபடி சேர்க்கப்படலாம்னு இந்தியன் கேம்பில் கூட பேசினாங்க. கபடிக்கான எதிர்காலம் பிரகாசமா இருக்கு. கண்ணகி நகரில இருந்து ஒலிம்பிக்கில் விளையாடறதுதான் எங்களோட அல்டிமேட் இலக்கு.
கார்த்திகா: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுக்கணும். அதுதான் என் கனவு.
கார்த்திகாவின் தந்தை: கார்த்திகா ஒரு வார்த்தையை தொடர்ந்து வலியுறுத்துவா, ``நான் மட்டும் இல்லை, என்னைப் போல நிறைய பேர் கண்ணகி நகரில் இருக்காங்க. அவங்களை ஊக்கப்படுத்துங்க”னு சொல்வா.
அணி தோழி காவியா: கார்த்திகா அமைதியா இருந்தாலும், போட்டிகளின்போது அதிக கவனம் செலுத்துவாங்க. அவங்க அனைவருக்கும் ஓர் இன்ஸ்பிரேஷன்.
முதலமைச்சரின் உறுதி
மொழிகள்: தங்கப் பதக்கம் வென்று திரும்பிய கார்த்திகாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கே அழைப்பு விடுத்து உயர் ரொக்கப் பரிசை வழங்கினார். மேலும், கார்த்திகா வைத்த கோரிக்கைகளை ஏற்று பல உறுதிமொழிகளை அளித்துள்ளார்:
* தற்போது வாடகை வீட்டில் வசிக்கும் கார்த்திகாவுக்கு சொந்த வீடு வழங்க உறுதி.
* கண்ணகி நகரில் பார்க் மைதானத்தில் பயிற்சி செய்து வந்ததால், இன்டோர் மைதானம் அமைக்க உத்தரவு.
* கார்த்திகாவுக்கு 18 வயது ஆனவுடன் அரசு வேலை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
ஆரம்பத்தில் தங்கள் பெண் பிள்ளைகளை கபடிக்கு அனுப்பியதற்காக கேலி செய்தவர்கள், இப்போது வியப்புடன் பெருமைப்படுகிறார்கள். தற்போது மகள் ``ஒரு விதை தூவி இருக்கிறாள்” என்று பெற்றோர்கள் மகிழ்கிறார்கள்.
வறுமையை வென்றது மட்டுமல்ல, சமூக பாகுபாடுகளை எதிர்கொண்டு, கண்ணகி நகரின் பெயரையே உலக அரங்கில் பிரகாசிக்க வைத்திருக்கிறார் கார்த்திகா.
உடம்பில் வலி இருந்தாலும் சோர்வடையாமல், மறுநாள் துருதுருவென கிளம்பி பயிற்சிக்குச் செல்லும் அர்ப்பணிப்பு, இன்று அவரை இந்தியாவின் பெருமையாக உயர்த்தியிருக்கிறது.