இந்திய அணி அபார வெற்றி: 4 விக்கெட் வீழ்த்தி குல்தீப் மாயாஜாலம்
துபாய்: ஆசிய கோப்பை டி20 இறுதிப் போட்டியில் நேற்று, பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை டி20 இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடந்தது. அப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய பாக். துவக்க வீரர்கள் சாகிப்ஸதா ஃபர்கான், ஃபகார் ஜமான் சிறப்பான துவக்கத்தை தந்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 84 ரன் சேர்ந்தபோது, ஃபர்கான் (57 ரன்), வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சயீம் அயூப் 14, முகம்மது ஹாரிஸ் 0, ஃபகார் ஜமான் 46 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின் வந்த உசேன் தலத் 1 ரன்னில் அக்சர் பந்தில், 5வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, 17வது ஓவரில் கேப்டன் சல்மான் ஆகா (8 ரன்), குல்தீப் சுழலில் வீழ்ந்தார்.
பின், ஹாரிஸ் ராவுப், பும்ரா பந்தில் போல்டானார். பும்ரா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் கடைசி விக்கெட்டாக முகம்மது நவாஸ் (6 ரன்) வீழ்ந்தார். அதனால், 19.1 ஓவரில் பாக். 146 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா தரப்பில், குல்தீப் யாதவ் 4, வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 147 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 19.4 ஓவர் முடிவில் இந்திய அணி 150 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை இந்தியா கைப்பற்றியது.