ஆசிய கோப்பை டி.20 தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாகும் சுப்மன் கில்
மும்பை: 8 அணிகள் ஆசிய கோப்பை டி.20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. டி.20 அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் தொடர உள்ளார். ஆனால் துணை கேப்டனாக சுப்மன்கில் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடைசி தொடரில் அக்சர் பட்டேல் துணை கேப்டனாக செயல்பட்ட நிலையில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சூரிய குமார் யாதவிற்கு வயதாகி வரும் நிலையில் அவர் 2026 டி20 உலக கோப்பையுடன் சென்று விடுவார். அதன் பின் இந்திய டி20 அணியையும் வழிநடத்தும் பொறுப்பு கில்லுக்கு வழங்கப்படும். இதனால் கில் தற்போது இருந்தே டி20 போட்டிக்கும் தயாராகும் விதமாக பிசிசிஐ இந்த வாய்ப்பை அவருக்கு வழங்க இருக்கிறது. இதனிடையே ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த 4வது நாளில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இதனால் ஆசிய கோப்பை தொடரில் டெஸ்ட் அணியில் ஆடும் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.