புதிய வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டல்; இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் கவலை
மும்பை: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது இரண்டாம் நிலை வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய மிரட்டலால், இன்று பங்கு வர்த்தக தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்பட்டன. ஆசியா, ஐரோப்பா முதல் அமெரிக்கா வரையிலான உலகளாவிய சந்தைகளின் மீட்சியைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று வர்த்தக சரிவிலிருந்து சற்றெ மீண்டு வந்தன. உலக சந்தைகள் முழுவதும் ஏற்றம் கண்ட சூழலில், டிரம்பின் கூடுதல் வரிவிதிப்பு அறிவிப்புகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணமாகக் காட்டி, இந்தியாவின் மீது இரண்டாம் நிலை வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் விடுத்த மிரட்டல், முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக இன்று பங்கு வர்த்தகம் எச்சரிக்கையுடன் தொடங்கியது. தேசியப் பங்குச்சந்தையான நிஃப்டி 2.50 புள்ளிகள் சரிந்து 24,720.25 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 72.29 புள்ளிகள் சரிந்து 80,946.43 புள்ளிகளிலும் வர்த்தகத்தைத் தொடங்கின. இதுகுறித்து கருத்து தெரிவித்த சந்தை நிபுணர் அஜய் பக்கா, ‘வரும் வெள்ளிக்கிழமைக்குள் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷ்ய அதிபர் புதினுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த காலக்கெடு முடிவடைகிறது. அன்று இந்த இரண்டாம் நிலை வரிகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம். ஏற்கனவே இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரிகளின் தாக்கம் பங்குச்சந்தையில் எதிரொலித்துவிட்டது. இந்த வரி விதிப்பு மேலும் அதிகரித்தால் இருதரப்பு வர்த்தகம் பாதிக்கப்படும். இருப்பினும், அமெரிக்காவிற்கான இந்தியப் பொருட்களின் ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் வருவாய் வெறும் 2 சதவீதமே என்பதால், பங்குச்சந்தையில் இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும்’ என்று விளக்கமளித்தார்.
துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி ஆட்டோ, தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் பொருட்கள் மற்றும் மனை வணிகம் ஆகிய துறைகளின் பங்குகள் சரிவைச் சந்தித்தன. அதேசமயம், ஊடகம், உலோகம், மருந்து மற்றும் பொதுத்துறை வங்கிப் பங்குகள் சிறிய ஏற்றத்துடன் வர்த்தகமாகின. மற்ற ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பான், சிங்கப்பூர், தைவான் மற்றும் தென் கொரியாவின் குறியீடுகள் ஏற்றம் கண்டன. இன்றைய பங்குச்சந்தை வர்த்தக சரிவால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கூறினர்.