ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் இந்திய வீரர்கள்
லண்டன்: ஓவல் மைதானத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:சச்சின்: முகமது சிராஜ் ஒரு சூப்பர் மேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வெற்றியை நினைத்தாலே எனக்கு மெய் சிலிக்கின்றது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் முடிவடைந்தாலும், இந்திய வீரர்களின் செயல்பாடு பத்துக்கு பத்து என்று சொல்லலாம். எப்படிப்பட்ட வெற்றி இது.
ரகானே: இதைவிட சிறப்பான ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க முடியாது. பரபரப்பாக இந்த போட்டி முடிந்து இருக்கிறது. கடும் நெருக்கடியில் நமது அணி வீரர்கள் தங்களுடைய போர்க்குணத்தை காட்டியிருக்கிறார்கள். இந்திய அணிக்கு பாராட்டுக்கள்.
புஜாரா: வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இது. நமது அணி வீரர்கள் நம்பிக்கையையும், போர்க்குணத்தையும் காட்டி உள்ளனர். இந்த சிறப்புமிக்க தொடருக்கு ஏற்ற முடிவாக இது அமைந்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் போல் வேறு எதுவும் வராது.
அனில் கும்ப்ளே: இந்தியா சிறப்பாக விளையாடியிருக்கிறது. அற்புதமான தொடர் இது. இந்த தொடரில் விளையாடிய இரு அணி வீரர்களுக்கும் என் பாராட்டுக்கள். சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா நெருக்கடிகளை சமாளித்து அபாரமாக செயல்பட்டனர். இந்திய அணிக்கும் என் பாராட்டுக்கள்.
சூரியகுமார் யாதவ்: இந்திய வீரர்கள் வெளிக்காட்டிய செயல்பாட்டை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிராஜ், பிரசித் கிருஷ்ணாவை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.
ஹர்பஜன்சிங்: இந்திய அணியின் சிறந்த செயல்பாடுகளில் இதுவும் ஒன்று. இந்திய அணியின் சிறந்த வெற்றிகளில் இது சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.