இந்திய ராணுவ கல்லூரியில் பயில வரும் 15க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: இந்திய ராணுவ கல்லூரியில் 2026ம் கல்வியாண்டு 8ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுக்கு வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2026ம் கல்வியாண்டு 8ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு டிசம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு சென்னையிலும் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் மாதிரி வினாத்தாள் தொகுப்பை ‘கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட் - 248003’ என்ற முகவரிக்கு விரைவு தபால் வழியே விண்ணப்ப கடிதம், கேட்புக் காசோலை ஆகியவற்றை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். பொதுப்பிரிவினர் ரூ.600க்கும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.555க்கும் காசோலை எடுக்க வேண்டும். பட்டியலினத்தவர்கள் சாதி சான்றிதழ் நகலும் சேர்த்து அனுப்ப வேண்டும். அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த தகவலை பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆர்வமுள்ளவர்கள் சேர்க்கை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.