இந்திய ஜனநாயகத்தை உருவாக்குவதில் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒரு மைல்கல்: தலைமை தேர்தல் ஆணையர் சொல்கிறார்
கான்பூர்: பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த இயக்கமானது இந்திய ஜனநாயகத்தை உருவாக்குவதில் ஒரு மைல் கல்லாகும் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். உபியின் கான்பூரில் ஐஐடி நிறுவப்பட்ட நாளையொட்டி நடந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கலந்துகொண்டு சிறப்பு முன்னாள் மாணவர் விருதை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேசியதாவது, ‘‘நான் ஐஐடி கான்பூரில் படித்த நான்கு ஆண்டுகள் என் வாழ்க்கையின் மிகவும் துடிப்பான மற்றும் மறக்க முடியாத ஆண்டுகள். நான் இங்கு உள்வாங்கிய மதிப்புகள் எனது நிர்வாக வாழ்க்கை முழுவதும் என்னை வழிநடத்தியுள்ளன. உலகின் மிகப்பெரிய வாக்காளர் பட்டியல் திருத்தம் பீகாரில் மட்டும் நடத்தப்பட்டது. இப்போது மேலும் 12 மாநிலங்களில் 51கோடி வாக்காளர்களுக்கு நீட்டிக்கப்பட்டவுடன் அது தேர்தல் ஆணையத்திற்கும் நாட்டிற்கும் ஒரு வரலாற்று சாதனையாக இருக்கும். இந்த செயல்முறையானது நாடு முழுவதும் நிறைவடையும்போது தேர்தல் ஆணையத்தை பற்றி மட்டுமல்ல. இந்தியாவின் ஜனநாயக வலிமையைப் பற்றியும் மக்கள் பெருமைப்படுவார்கள்” என்றார்.