இந்திய கம்யூனிஸ்ட் கடும் எதிர்ப்பு பிஎம் ஸ்ரீ திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கேரள அரசு முடிவு: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி
திருவனந்தபுரம்: ஒன்றிய அரசின் பிஎம் ஸ்ரீ கல்வித் திட்டத்தில் சேரமாட்டோம் என்று கேரள அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் இந்த கல்வித் திட்டத்தில் சமீபத்தில் கேரளாவும் இணைந்தது. இது தொடர்பாக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்பட கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிஎம் ஸ்ரீ கல்வித் திட்டத்தில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என்று இக்கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்மதிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து நேற்றைய அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதனால் ஆளும் இடதுசாரி கூட்டணியில் மோதல் வெடித்தது. இந்த சிக்கலை தீர்ப்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பினோய் விஸ்வத்தை சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் இந்த விவகாரம் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ‘பிஎம் ஸ்ரீ கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக ஆய்வு நடத்த 7 அமைச்சர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும். இந்த அறிக்கையின்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.