அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய பெண் தொழிலதிபரிடம் அத்துமீறல்: ஆண் அதிகாரி தனது உடலை சோதித்ததாக புகார்
நியூயார்க்: அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய பெண் தொழிலதிபரை ஆண் அதிகாரி ஒருவர் அவரது உடலை தொட்டு சோதனை நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்திய பெண் தொழில்முனைவரான ஸ்ருதி சதுர்வேதி, அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஆங்கரேஜ் விமான நிலையத்தில் அதிகாரிகளால் மோசமாக நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‘ஆங்கரேஜ் விமான நிலையத்தில் என்னை ஆண் அதிகாரி ஒருவர் பரிசோதித்தார். எனது உடலை தொட்டு அவர் பரிசோதனை செய்தார். கிட்டத்தட்ட 8 மணி நேரம் குளிர்ந்த அறையில் தடுத்து வைக்கப்பட்டேன். எனது மொபைல் ஃபோனும், பணப்பையும் பறிமுதல் செய்யப்பட்டது. என்னிடம் அமெரிக்க காவல்துறை மற்றும் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தொலைபேசி அழைப்பு மற்றும் கழிவறை பயன்பாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் எனது விமான பயணத்திட்டம் தடைபட்டது. எனது பையில் ‘பவர் பேங்க்’ இருந்ததால், என்னிடம் பலகட்ட பரிசோதனை நடந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்த மோசமான அனுபவம் என்னை காயப்படுத்தியது’ என்று கூறியுள்ள அவர், தனது பதிவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு டேக் செய்து விவரித்துள்ளார். இந்திய பெண் தொழில்முனைவர் ஒருவர் அமெரிக்காவில் நடத்தப்பட்ட விதம் குறித்து சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.