74 சதவீத இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!
ஒட்டாவா: சர்வதேச மாணவர் விசா நடைமுறைகளைக் கனடா அரசு கடுமையாக்கியுள்ளதால், இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவில் படித்து, அங்கேயே வேலை பார்த்து, குடியேறலாம் என்ற இந்திய மாணவர்களின் கனவு தற்போது கலைந்து போகும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, கனடாவின் மாணவர் விசா வழங்கும் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, போலி ஆவணங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மோசடி விண்ணப்பங்கள் குவிந்தன.
குறிப்பாக, 2023ம் ஆண்டில் போலி சேர்க்கைக் கடிதங்கள் தொடர்பான சுமார் 1,550 மோசடி விண்ணப்பங்கள் இந்தியாவிலிருந்து வந்தது கண்டறியப்பட்டது. இதுபோக, கனடாவில் நிலவும் வீட்டு வசதி பற்றாக்குறை, சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள சுமை மற்றும் உள்கட்டமைப்பு நெருக்கடிகள் போன்ற உள்நாட்டுப் பிரச்னைகளைச் சமாளிக்கவும், தற்காலிக குடியேற்றத்தைக் குறைக்கவும் கனடா அரசு முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக, சர்வதேச மாணவர் சேர்க்கைக்கான விதிகளை அந்நாட்டு அரசு கடுமையாக்கியுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளின் விளைவாக, இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் விகிதம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 32% ஆக இருந்த நிராகரிப்பு விகிதம், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 74 சதவீதமாக உயர்ந்துள்ளது. மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது சுமார் 40% ஆக உள்ள நிலையில், இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் மிக அதிகளவில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், விசா கோரி விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது. 2023 ஆகஸ்டில் 20,900க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த ஆகஸ்டில் வெறும் 4,515 விண்ணப்பங்களே வந்துள்ளன. மேலும், மாணவர்கள் தங்கள் படிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவுக்காகக் காட்ட வேண்டிய நிதி ஆதாரத்துக்கான குறைந்தபட்சத் தொகையும் கிட்டத்தட்ட இருமடங்காக, அதாவது 20,635 கனடா டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒட்டாவாவில் உள்ள இந்தியத் தூதரகம், ‘கனடாவின் கல்வி நிறுவனங்களுக்கு இந்திய மாணவர்கள் ஆற்றிவரும் மதிப்புமிக்க பங்களிப்பை’ சுட்டிக்காட்டி, விசா நிராகரிப்பு விகிதம் அதிகரித்திருப்பது குறித்த கவலையைத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா விசா நடைமுறைகளை கடுமையாக்கிய நிலையில், தற்போது கனடாவும் விசா நடைமுறைகளை கடுமையாக்கியதால் இந்திய மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.