இந்திய வீரர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்னை பிரபலப்படுத்த வேண்டாம்: நடிகர் அஜித் குமார் பேட்டி
ஜெர்மனி: தமிழ்ப் படவுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார், நடிப்பை தாண்டி கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஒரு வருடமாக துபாய் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடந்த சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்றார். துபாயில் நடந்த கார் ரேசில் 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தார்.
இந்நிலையில், கார் பந்தயத்துக்கு இடையே அஜித் குமார் கொடுக்கும் பேட்டி இணையதளங்களில் வைரலாகும். தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்றுள்ள அவர், அங்குள்ள ரசிகர்களை சந்தித்தார். அவருடன் இணைந்து செல்பி மற்றும் வீடியோ எடுத்துக்கொண்ட ரசிகர்கள், தங்கள் மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்துகொண்டனர்.
அப்போது அவர்களிடம் பேசிய அஜித் குமார், ‘கார் ரேஸை பிரபலப்படுத்துங்கள். தயவுசெய்து என்னை பிரபலப்படுத்த வேண்டாம். இங்கு கார் பந்தயத்தில் ஈடுபடும் இந்திய வீரர்களை முன்னிலைப்படுத்துங்கள். இங்குள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
அவர்களின் சிரமங்கள் நிறையபேருக்கு தெரிவதில்லை. நிச்சயம் ஒருநாள் இந்திய வீரர்களும் பார்முலா ஒன் கார் ரேஸில் சாம்பியன் ஆவார்கள். மோட்டார் ஸ்போர்ட்ஸை பிரபலப்படுத்துங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அஜித் குமாரின் இந்த பேச்சு வைரலானதை தொடர்ந்து, கார் ரேஸில் அவர் காட்டும் ஈடுபாடு குறித்து ரசிகர்கள் பலர் கமென்ட் வெளியிட்டு வருகின்றனர்.