‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 3 தேர்தல் ஆணையர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும்: ராகுல்காந்தி பகிரங்க எச்சரிக்கை
பாட்னா: பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ‘வாக்குத் திருட்டு’ நடப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள ராகுல் காந்தி, ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், ‘வாக்குத் திருட்டு’ நடப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தனது குற்றச்சாட்டுகளுக்கு ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரத்தில் கையொப்பமிட்டு உரிய ஆதாரங்களை ராகுல்காந்தி சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கருதப்படும் என்றும் கெடு விதித்திருந்தார். இந்த நிலையில், பீகாரின் கயா நகரில் நடைபெற்ற வாக்காளர் உரிமை யாத்திரையில் பேசிய ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் மீதான தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளார். அப்போது அவர் பேசுகையில், ‘தேர்தல் ஆணையத்தின் ‘வாக்குத் திருட்டு’ கையும் களவுமாகப் பிடிபட்டும், என்னிடமே அவர்கள் பிரமாணப் பத்திரம் கேட்கிறார்கள்.
‘வாக்குத் திருட்டு’ என்பது பாரத மாதாவின் ஆன்மா மீதான தாக்குதல். பிரதமர் மோடி சிறப்புத் திட்டம் பற்றிப் பேசுவதைப் போல, தேர்தல் ஆணையம் பீகாருக்காக சீர்த்திருத்தம் என்ற பெயரில் சிறப்புத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது ஒரு புதிய வகை ‘வாக்குத் திருட்டு’ ஆகும்’ என்று பேசினார். மேலும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரை நேரடியாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, ‘நீங்கள் மூவரும் பாஜகவில் உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்டு அவர்களுக்காக வேலை செய்கிறீர்கள். இப்போது இருப்பது மோடியின் அரசு. ஆனால், டெல்லியிலும் பீகாரிலும் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்போது, நாடு முழுவதிலும் இருந்து நீங்கள் திருடிய வாக்குகளுக்காக உங்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுப்போம்’ என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து ராகுல்காந்தி பேசி
னார்.