சொந்த மண்ணில் தூசி ஆன ஆஸி: தொடரை வென்று இந்தியா விஸ்வரூபம்; மழையால் 5வது டி20 டிரா
பிரிஸ்பேன்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5வது டி20 போட்டி மழையால் டிரா ஆனதால், 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 5 டி20 போட்டிகளில் ஆடியது. 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், பிரிஸ்பேனில் நேற்று கடைசி மற்றும் 5வது டி20 போட்டி நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். போட்டி துவங்கியது முதல் ஆஸி பந்து வீச்சை இந்திய வீரர்கள் துவம்சம் செய்து ரன் வேட்டையாடினர்.
அபிஷேக் சர்மா 13 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 23 ரன், சுப்மன் கில் 16 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 29 ரன் விளாசினர். அணியின் ஸ்கோர், 4.5 ஓவரில் 52 ஆக இருந்தபோது மழை வெளுத்து வாங்கியது. அதன் பின் 2 மணி நேரம் ஆகியும் மழை நின்றபாடில்லை. அதனால் வேறு வழியின்றி போட்டி கைவிடப்பட்டு டிரா ஆனது. இதன் மூலம் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. மேலும், தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் வழிகாட்டலில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 5 டி20 தொடர்களை வென்று மகத்தான சாதனையை அரங்கேற்றி உள்ளது. இந்த தொடரில் 163 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 528 பந்துகளில் 1000 அபிஷேக் உலக சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய துவக்க வீரர் அபிஷேக் சர்மா, 13 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் விளாசினார். இதன் மூலம் வெறும் 528 பந்துகளில் 1000 ரன்களை கடந்து புதிய உலக சாதனையை அவர் படைத்தார். இந்த சாதனைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் (573 பந்துகளில் 1000), இங்கிலாந்தின் பில் சால்ட் (599 பந்துகள்) ஆகியோரை அபிஷேக் பின் தள்ளியுள்ளார். டி20 போட்டிகளில் 28 இன்னிங்ஸ்கள் ஆடியுள்ள அபிஷேக், 2 சதம், 6 அரை சதங்கள் வெளுத்துள்ளார்.