கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள் நாடு திரும்ப உதவி: சீனாவுக்கு இந்தியா நன்றி
டெல்லி: கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள் நாடு திரும்ப உதவி செய்த சீனாவுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் கைலாஷ் மானசரோவர் அமைந்துள்ளது. இங்கு செல்ல சீன அரசின் அனுமதி முக்கியம். கடந்த 2020ம் ஆண்டு லடாக் எல்லையில் இந்தியா சீனா இடையிலான மோதல் காரணமாக இந்த யாத்திரை நிறுத்தப்பட்டது. 5 ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் துவங்கி உள்ளது. மானசரோவருக்கு, உத்தரகாண்டின் லிபுலேக் கணவாய், சிக்கிமின் நாது லா கணவாய், நேபாளத்தின் காத்மாண்டு ஆகிய 3 வழிகளில் செல்ல லாம்.
இந்தாண்டு யாத்திரை சென்றவர்களில் பலர் காத்மாண்டு வழியாக சென்றனர். நேபாள கலவரத்தால் காத்மாண்டு வழியாக யாத்ரீகர்கள் நாடு திரும்ப முடியாத சூழல் நிலவியது. திபெத் மற்றும் சீனாவில் உள்ள இந்தியர்கள் உடல் நலனில் கவனம் செலுத்தவேண்டும் என சீனா கூறியிருந்தது. சீன, திபெத் அதிகாரிகளால் மானசரோவர் யாத்திரை சென்றவர்கள் இந்தியா திரும்ப வாய்ப்பு உள்ளது. திபெத் மற்றும் சீன அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.