வர்த்தக பேச்சுவார்த்தையில் திருப்பம்; இந்தியாவுக்கான வரியை குறைப்பேன்: டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு
வாஷிங்டன்: இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், வரிகளைக் குறைக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை 2030ம் ஆண்டுக்குள், தற்போதைய 191 பில்லியன் டாலரில் இருந்து 500 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்கும் இலக்குடன், இருநாட்டு அதிகாரிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா அதிக வரிகளை விதித்தது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தின் முதல் பகுதி நவம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்படலாம் என இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா உடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றம் குறித்துத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு வாய்ப்புள்ளது. நாங்கள் மிகவும் நெருக்கமாக உள்ளோம். நியாயமான ஒப்பந்தம் எட்டப்பட்டவுடன், குறிப்பிட்ட கட்டத்தில் நிச்சயமாக வரிகளைக் குறைப்பேன்’ என்று குறிப்பிட்டார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கணிசமாகக் குறைக்கத் தொடங்கியுள்ளதை அடுத்தே, டிரம்ப் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு, வர்த்தக அணுகுமுறை மற்றும் வரி விதிப்பு தொடர்பான சர்ச்சைகளால் நீண்டகாலமாக நிலவி வந்த வர்த்தகப் பதற்றத்தைத் தணிக்கும் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.