தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இந்தியா மீது வரி மேல் வரி விதித்து அடாவடி காட்டும் டிரம்ப்: 66% ஆயத்த ஆடைக்கு வரியா? 20% திருப்பூரில் ஏற்றுமதி முடங்கும்; 3 மாதத்தில் ரூ.6,000 கோடி இழப்பு ஏற்படும்

* தொழில்துறையினர் கவலை

* மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தை அதிகரிக்க திட்டம்

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25 25 என மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்தே நடைமுறைக்கு வருமென்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையிலான பரஸ்பர வரி காலக்கெடு முடிவடையும் நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதுவரை இருந்த 10 சதவீதம் என்பது 15 சதவீதமாக உயரும் என்று இந்திய ஏற்றுமதியாளர்கள் அமைப்பினர் பலரும் எதிர்பார்த்த நிலையில், 50 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரி விதிப்பால் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியாளர்கள் அனைவருக்குமே பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படும் நிலையில், இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மற்ற துறைகளைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜவுளித்துறையினர் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா, இந்திய ஆடை மற்றும் நெசவு ஏற்றுமதிக்கு மிகப்பெரிய சந்தையாக இருப்பதால் இந்த வரி விதிப்பு கடினமான சவாலை உருவாக்குமென்று இந்திய நெசவுத்தொழில் கூட்டமைப்பு (CITI) தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில், ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கவனம் பெற்றுள்ளது டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் மாநகரம்.

இங்கிருந்து ஆண்டுதோறும் 35 சதவீதத்திற்கும் அதிகமான ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி ஆடைகள் முதல் செயற்கை நூலிழை ஆடைகள் வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் மற்றும் பேஷன் ஆடைகளும் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இயற்கைக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும், மறுசுழற்சி முறையிலும் திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளுக்கு அமெரிக்காவில் தனி மதிப்பு உள்ளது. இதனால் கடந்த 2024-2025ம் நிதியாண்டில் சுமார் 18,000 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் நடைபெற்றது.

இதற்கிடையில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது அடுத்தடுத்து வரி மேல் வரி விதித்து வருகிறார். இந்த நடவடிக்கை, இந்திய தயாரிப்பு பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் உள்ளது. இந்த பாதிப்பு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட்டாலும், திருப்பூர் தொழில்துறையினருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருப்பூர் ஆயத்த ஆடை துறையினருக்கு இந்த வரி விதிப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமின்றி, அமெரிக்க வர்த்தகர்களையும் இந்த வரி விதிப்பு பாதித்துள்ளது.

எனவே, இரு தரப்பு பாதிப்புகளையும் உணர்ந்து அமெரிக்க அரசும், ஒன்றிய பா.ஜ., அரசும் சுமுக முடிவு எட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திருப்பூர் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். டிரம்ப் பொறுப்பேற்பதற்கு முன்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த மற்றும் ஜவுளி ஆடைகளுக்கு 6.9% இறக்குமதி வரை வசூலிக்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு 10 சதவீத வரி உயர்வை அமலுக்கு கொண்டு வந்ததன் மூலம் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக 16.9% வரி விதிப்பு அமலில் இருந்து வந்தது.

தற்போது 50 சதவீத அபராத வரியுடன் சேர்த்து 66.9% இறக்குமதி வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வரி உயர்வுகளை மாற்றி மாற்றி அறிவித்து வருவதன் காரணமாக அமெரிக்க வர்த்தகர்கள் குழப்பமான நிலையில் இருந்து வருகின்றனர். தற்போது குளிர்கால ஆடைகளுக்கான ஆர்டர்களை திருப்பூருக்கு அளிப்பதிலும் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தற்போதைய நிலையில் வருகின்ற 3 மாதங்களில் குளிர்கால ஆடைகள் ஏற்றுமதியில் சுமார் ரூ.6000 கோடி இழப்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதே 50 சதவீதம் வரி விதிப்பு முறை அமலில் இருக்குமானால் திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி பெரும் அளவில் பாதிப்பை சந்திக்கக்கூடும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி திருப்பூரை சேர்ந்த தொழில்துறையினர் கூறியதாவது: அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு இதுவரை பலமுறை வரிகளை மாற்றி அமைத்து உள்ளார். இது, அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் பல நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக, திருப்பூரின் ஆயத்த ஆடை துறையினருக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனால், திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு மட்டுமின்றி, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வரியில்லா வர்த்தகம் ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தை உள்ளிட்டவை சாதகமான நிலையில் இருப்பதால், அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தில் ஈடுகட்ட முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இருப்பினும், திருப்பூரில் இருந்து 35 சதவீதம் வரை அமெரிக்கவிற்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றில் முழுமையான பாதிப்பு இல்லாவிட்டாலும், 15 முதல் 20 சதவீதம் வரை நேரடியாக பாதிப்பு ஏற்படும். இந்த இழப்பை தவிர்க்க, ஒன்றிய அரசு, மானிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யக்கூடிய தொழில் அமைப்பினரை நேரில் சந்தித்து பேசி, இழப்புகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* உற்பத்தி செலவுகளை குறைக்க ஒன்றிய அரசு திட்டம் வகுக்குமா?

ஆயத்த ஆடை துறையில் போட்டி நாடுகளில்கூட உற்பத்தி செய்ய முடியாத வகையில், பசுமை சார் ஆடைகள் மற்றும் அமெரிக்காவிற்கு தேவையான பேஷன் ஆடைகள் திருப்பூரில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே, இதற்காக அமெரிக்க வர்த்தகர்கள் இந்தியாவுடன் வர்த்தக உறவு கொண்டாலும்கூட அது தற்காலிகமானது. அதனை நிரந்தரமாக்கிக்கொள்ள பசுமை சார் மற்றும் பேஷன் ஆடைகளை உற்பத்தி செய்வதற்கான செலவுகளை குறைக்கும் வகையில் திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் ஆடைகளின் உற்பத்தி செலவை குறைத்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்யும்போது அமெரிக்க வர்த்தகர்கள் தொடர்ந்து திருப்பூருடன் வர்த்தகம் மேற்கொள்ள முடியும்.

* சீன வர்த்தகத்தை கைப்பற்றுவதை தடுக்க கூடுதல் வரி விதிப்பு

சீனாவுக்கு அதிகளவில் அமெரிக்கா வரி விதித்துள்ள நிலையில், சீனாவின் அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகத்தை கைப்பற்றும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இருக்கின்றன. இந்நிலையில்தான் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்துக்கும் 50 சதவீதம் வரியை அமெரிக்க அதிபர் விதித்துள்ளார். ஆனால், வரி விகிதங்களை ஒப்பிடுகையில், வியட்நாமை தவிர மற்ற நாடுகளைவிட இந்தியாவுக்கான வரி விதிப்பு குறைவாக இருப்பது சாதகமாகவே கருதப்படுகிறது என இந்திய நெசவு தொழில் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

* ஜவுளி தொழிலை நிலைகுலையச் செய்யும்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் கூறுகையில், ‘இது அமெரிக்க ஏற்றுமதியை நிலைகுலையச் செய்யும். 50% வரி என்பது திருப்பூர் ஆயத்த ஆடை துறைக்கு மிகவும் அதிகம். குறைந்த விலையில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறோம். திருப்பூரைப் பொறுத்தவரை 50 சதவீத ஆடைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அமெரிக்க அதிபர் வரிவிதிப்பை அறிவித்தது முதலே அமெரிக்க வர்த்தகர்கள் வர்த்தக விசாரணையை நிறுத்தி உள்ளார்கள். போட்டி நாடுகளுக்கு மிக குறைவான வரி விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளுக்கு நம்மை விட குறைவான வரி விதிப்பு அமலில் உள்ளது. இதனால் அதிகமான அமெரிக்கா வர்த்தகர்கள் அந்நாடுகளை நோக்கி செல்லும் அச்சம் உள்ளது. ஜவுளித்துறை தான் அதிக வேலை வாய்ப்புகளை கொடுக்கும் தொழில். ஆகையால் இந்த வரி விதிப்பு நமது தொழிலை நிலைகுலையச் செய்யும். வேலைவாய்ப்புகளை மக்கள் இழக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனை ஒன்றிய அரசு கவனம் செலுத்தி பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்’ என்றார்.

* வரி விதிப்பு மேலும் அதிகரிக்கும்

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி கூறுகையில், ‘2024-25 ஆம் நிதியாண்டில் 44,000 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் சரி பாதி அளவு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கான ஆடை ஏற்றுமதி மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 25 சதவீத வரி விதித்த போது வாடிக்கையாளர்களுடன் நல்லெண்ண அடிப்படையில் இழப்பீடு பகிர்வு செய்து கொள்ள ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் 50 சதவீதம் என்பது தலைகீழான நிலையை ஏற்படுத்தி உள்ளது. வரும் வாரங்களில் வரியை அதிகப்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. தற்போது 50% வரி என்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றார்.

* ஒரு ஆண்டில் ரூ.6.89 லட்சம் கோடிக்கு ஆடைகள் இறக்குமதி

கடந்த ஜனவரி-மே மாதம் இடையிலான 5 மாதங்களில் அமெரிக்காவுக்கான நெசவு மற்றும் ஆடைகள் ஏற்றுமதி, கடந்த ஆண்டு இதே காலத்தைவிட 13 சதவீதம் அதிகரித்து, அதன் மதிப்பு ரூ. 39,933 கோடியாக அதிகரித்துள்ளது. அபராத தொகை பற்றிய தெளிவின்மை, ஜவுளித்தொழிலை திட்டமிடுவதில் சிரமங்களை ஏற்படுத்துகிறது. அமெரிக்க அரசின் ஜவுளி மற்றும் ஆடை அலுவலகத்தின் (OTEXA) புள்ளி விபரத்தின்படி, கடந்த 2024ல் 12 மாதங்களில் ரூ.6.89 லட்சம் கோடிக்கு ஆடைகளை, அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது. இதில், சீனா 21 சதவீதம், வியட்நாம் 19 சதவீதம், வங்கதேசம் 9.3 சதவீதம் ஆகிய அளவில் ஏற்றுமதி செய்திருந்தன.

இந்த டாப் 10 நாடுகள் பட்டியலில், 5.9 சதவீதத்துடன் இந்தியா நான்காவது இருந்தது. 2025 ஜனவரி-மே இடையிலான 5 மாதங்களில், ரூ.2.75 லட்சம் கோடிக்கு அமெரிக்கா ஆடைகளை இறக்குமதி செய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் சீனாவை முந்தி, வியட்நாம் 19.9 சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்தது. சீனாவின் ஏற்றுமதி 21 சதவீதத்தில் இருந்து 15.4 சதவீதமாக குறைந்தது. அடுத்ததாக வங்கதேசம் 11.1 சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி 5.9 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

* திருப்பூரில் இருந்து 35 சதவீதம் வரை அமெரிக்கவிற்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றில் முழுமையான பாதிப்பு இல்லாவிட்டாலும், 15 முதல் 20 சதவீதம் வரை நேரடியாக பாதிப்பு ஏற்படும்.

* திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு மட்டுமின்றி, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

* இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வரியில்லா வர்த்தகம் ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தை உள்ளிட்டவை சாதகமான நிலையில் இருப்பதால், அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தில் ஈடுகட்ட முடியும்.

* பாதிப்பை சரிக்கட்டுவது எப்படி?

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு, ஆயத்த ஆடை துறையில் இந்தியாவிற்கு போட்டி நாடுகளான வங்கதேசம், வியட்நாம், லங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்தியாவிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு காரணமாக அமெரிக்காவின் வர்த்தகர்கள், வரி குறைவான இலங்கை, வங்கதேசம், வியட்நாம் நாடுகளில் இருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்யக்கூடும். அந்நாடுகளுக்கு 20 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியா பின்தங்கி செல்லும். இதனை ஈடுகட்ட மற்ற சர்வதேச நாடுகளை இந்தியாவின் பக்கம் ஈர்க்க, தொழில் துறையினருக்கு ஒன்றிய அரசு சலுகை திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும். இதை செய்தால் மட்டுமே பாதிப்பை ஈடு செய்ய முடியும்.

* 30% குறு, சிறு நிறுவனங்களுக்கு பாதிப்பு

ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் அதனை சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சுமார் 90 சதவீதம் வரை இயங்கி வருகின்றன. ஏற்றுமதி ஆர்டர்களை பொறுத்து, பல்வேறு தேவைகளையும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலமாக பெரு நிறுவனங்கள் பெற்று வருகின்றன. தற்போது அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு காரணமாக திருப்பூரில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் ஏற்றுமதி ஆடர்கள் பாதிப்புக்குள்ளாகும் பட்சத்தில் இதனை நம்பியுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சுமார் 30 சதவீதம் வரை பாதிப்பை சந்திக்கும். இதனால், தொழிலாளர்கள் வேலை இழப்பு, வருவாய் இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க கூடும்.