இந்தியா மீதான வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு அதிக பாதிப்பு: டிரம்ப் நண்பர் கருத்து
வாஷிங்டன்: இந்தியா அதிக வரி விகிதத்தைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்கு பதில் நடவடிக்கையாக 50 சதவீத கூடுதல் வரியை அறிவித்தார். டிரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகளை அவரது நண்பரும், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான ஜான் போல்டன் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில்,’ இந்தியா மீது அதிபர் டிரம்ப் விதித்த வரிகள், அமெரிக்காவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
சீனா மீது டிரம்ப் கருணை காட்டியுள்ளார். அதேநேரத்தில், இந்தியா மீதான வரிகளை கடுமையாக்கியுள்ளார். இதன்மூலம், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இலக்கு சீனாதான். டிரம்ப்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் இலக்கை பலவீனப்படுத்தி உள்ளது. இந்தியாவை விட சீனாவை டிரம்ப் ஆதரிக்கிறார்.
இது ஒரு மிகப்பெரிய தவறு. ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து இந்தியாவை விலக்க பல பத்தாண்டுகளாக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் தற்போது ஆபத்தில் உள்ளன. ரஷ்யாவை காயப்படுத்தும் நோக்கில் இந்தியா மீது விதிக்கப்பட்ட இரண்டாவது 25% வரி, இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக்கும். உக்ரைன் விஷயத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த இது வழிவகுக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.