“அடுத்த தலைமுறையை மனதில் வைத்து ஆட்சி’’ இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
இதில், அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது; பெரியாரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது தான். அன்றைய காலகட்டத்தில் கலைஞர் அதனை சட்டமாக கொண்டு வந்தார். அப்படிப்பட்ட ஒருவருக்கு 102 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறோம். இன்றைக்கு கடவுள் பெயரை வைத்து அரசியல் செய்கிறார்கள். தமிழ் கடவுள் என்று சொன்னால் நம்மைப் பொறுத்தவரையில் கலைஞர் தான். 5 முறை தமிழ்நாட்டை ஆண்டவர் நமது கலைஞர்தான். நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதால் 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் நிலையில் முருகன் தொடர்பாக நடக்க உள்ள மாநாட்டில் முருகனின் புகைப்படத்தைவிட முக்கியஸ்தர்களின் புகைப்படம்தான் பெரிய அளவில் உள்ளது.
கலைஞர் என்ன செய்துள்ளார் என்று கேட்பவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். கலைஞரின் ஆட்சியில் 50 ஆண்டுக்கு முன்பு அண்ணா மேம்பாலம் அமைக்கப்பட்டது. அடுத்த தலைமுறையினரை மனதில் வைத்து ஆட்சி புரியக்கூடிய ஒரு இயக்கம் திமுக. இந்த இயக்கத்தில் மட்டும்தான் பொறுப்புகள் இல்லை என்றால் கூட நான் உடன்பிறப்பு என அனைவரும் ஒன்றிணைந்து நிற்கக்கூடிய ஒரு இயக்கமாக உள்ளது. திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் வள்ளுவர் கோட்டம் என்கின்ற ஒன்றினை அன்றே கட்டி முடித்தார்.அதனை இன்று பலரும் ஆசையுடன் வருகை புரிந்து பார்க்கக்கூடிய அளவிற்கு மாற்றியது நமது முதலமைச்சர்தான்.
குறிப்பாக, வள்ளுவர் கோட்ட நிகழ்வின்பொழுது மாற்றுத்திறனாளிகள் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த நன்றி விழா என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட அரசாணைகளை வெளியிட்டதற்காக அனைத்து மாற்று திறனாளிகள் இயக்கத்தை சார்ந்தவர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கொள்கையில் இருந்து ஒரு தலைவன் தவறுவான் என்றால் அதற்கு ஒட்டுமொத்த பாடத்தையும் தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக நடத்திவிடுவார்கள்.
குறிப்பாக ஒட்டுமொத்த இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். ஏனெனில் பகுப்பாய்ந்து நாம் செயலாற்றுவதன் காரணத்தினால் இது சாத்தியமானது. கலைஞரின் காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய பட்டாளம் இருந்தது. நமது இன்றைய முதலமைச்சரை தொடர்ந்து வருகை புரியவுள்ள நமது இளம்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகையும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.