இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை எஸ்ஐஆர் ஏற்படுத்தி உள்ளது: திருமாவளவன் பேட்டி
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அவருடைய கட்சியைச் சார்ந்த பலர் என்னை சந்தித்தார்கள். அப்போது அவர்கள் முன்வைத்த முக்கியமான கோரிக்கை தொடர்பாக முதல்வரை சந்தித்து ஒரு மனுவை வழங்கி இருக்கிறோம். எஸ்ஐஆர்க்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் 24ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்து இருக்கிறோம். பாஜவும் தேர்தல் ஆணையமும் இணைந்து செய்யும் கூட்டு சதி, அவர்கள் குடியுரிமையை பறிக்கும் செயல்திட்டமாகவும், எதிர் வாக்குகளை பட்டியியலில் நீக்கவும் இதனை வடிவமைத்து இருக்கிறார்கள். பீகார் தேர்தல் முடிவுக்கு பிறகு எஸ்ஐஆர் இந்தியா வுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயகத்தைக் கொன்று புதைக்கின்ற சதி திட்டம் தான் நாடாளுமன்றத்தை கேள்விக்குறியாக்கும். மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது அடிப்படையில் தான் இந்த எஸ்ஐஆர் செய்யப்பட்டுள்ளது. சிஏஏ குடியுரிமை திட்டத்தை செயல்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிதான் இது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது நல்லது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.