கேரளாவில் பரபரப்பு; இன்ஸ்டா காதலியுடன் திருட்டு காரில் ஜாலியாக வலம் வந்த வாலிபர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் திருட்டு காரில் இன்ஸ்டாகிராம் காதலியுடன் ஜாலியாக டூர் சென்று வந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுபுழா அருகே கருட்டுகாவு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் கடந்த 4ம் தேதி மாயமானது. இதுகுறித்து மூவாற்றுபுழா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கார் திருட்டு போனது பற்றி கேரளாவில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரம் போலீசாருக்கும் இந்த கார் திருடப்பட்டது தெரியவந்ததால் காரின் மாடல் மற்றும் நம்பரை வைத்து விசாரித்தனர். இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு வணிக வளாகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த காரின் பதிவு எண் வேறாக இருந்தது. காரில் ஏராளமான மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன. ஆனாலும் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரின் பதிவு எண் போலியானது என தெரியவந்தது. இதையடுத்து அந்த காரில் இருந்த வாலிபர் மற்றும் இளம்பெண்ணிடம் விசாரித்தனர்.
இதில் கார் மூவாற்றுபுழாவில் திருடப்பட்டது என்பதும், அந்த வாலிபர் மூவாற்றுபுழாவை சேர்ந்த முகம்மது அல்சாபித் (20) என்பதும் அவருடன் இருந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான காதலி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருட்டு காரில் இளம்பெண்ணுடன் அல்சாபித் கேரளாவில் பல்வேறு இடங்களுக்கு ஹாயாக வலம் வந்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பிறகு அல்சாபித்தை மூவாற்றுபுழா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.