திருவனந்தபுரம் அருகே பயங்கரம் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி இளம்பெண்ணை கொல்ல முயற்சி: பெயிண்டர் கைது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை கீழே தள்ளி கொல்ல முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பெயிண்டரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் அருகே பாலோடு பகுதியை சேர்ந்தவர் சோனா (19). இவர் தனது தோழி அர்ச்சனாவுடன் நேற்று முன்தினம் எர்ணாகுளம் சென்றார். அங்கிருந்து டெல்லி- திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் திருவனந்தபுரத்திற்கு நேற்று முன்தினம் புறப்பட்டனர். 2 பேரும் ரயிலின் கடைசிப் பகுதியில் உள்ள பொதுப் பெட்டியில் பயணம் செய்தனர். வர்க்கலா அருகே ரயில் வந்த போது அர்ச்சனா கழிப்பறைக்கு சென்றார்.
அப்போது அவருடன் துணைக்கு சென்ற சோனா வாசல் அருகே நின்று கொண்டிருந்தார். திடீரென அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஒருவர் சோனாவை காலால் மிதித்து கீழே தள்ளினார். இதில் அவர் தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இந்த சமயத்தில் கழிப்பறையில் இருந்து வெளியே வந்த அர்ச்சனாவையும் அந்த நபர் ரயிலில் இருந்து கீழே தள்ள முயற்சித்தார். இதைபார்த்த பயணிகள் விரைந்து சென்று அர்ச்சனாவை மீட்டனர். தொடர்ந்து பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இது குறித்து ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று கீழே விழுந்த சோனாவை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ரயில் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை அடைந்ததும் சோனாவை கீழே தள்ளிய நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் திருவனந்தபுரம் பனச்சமூடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். குடிபோதையில் இருந்த அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரயிலில் வாசலிலேயே நின்று கொண்டிருந்ததால் கோபத்தில் எட்டி உதைத்தேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சொரணூர் அருகே சவும்யா என்ற பெண் ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பின்னர் ரயிலில் பெண் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. ஆனால் இதுவரை ரயிலில் பெண் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வில்லை. குறிப்பாக பொதுப் பெட்டியில் எந்தவித பாதுகாப்பும் இல்லை என்று பயணிகள் கூறினர்.