அதிகரிக்கும் யானைகள் அட்டகாசம்: தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
குடகு: மடிக்கேரி தாலுகாவில் அதிகரித்து வரும் யானைகளின் தொல்லையை தடுக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடகு மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. காபி தோட்டங்கள், வயல்களில் முகாமிட்டுள்ள யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அதேபோல், மடிக்கேரி தாலுகாவின் செம்பு கிராமத்தை சுற்றிலும் உள்ள கிராமங்களில் யானைகள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அவற்றை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது,
‘செம்பு கிராமத்தை சுற்றிலும் உள்ள ஊருபையலு, தப்பட்கா, ஆனேஹள்ளா, காந்துபையலு பகுதிகளில் கடந்த பல நாட்களாக யானைகள் வயல்களில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகள் யானைகளால் பயிர் சேதமடைந்து வருகிறது. இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். பள்ளி மாணவர்கள் செல்லும் வழியில் யானைகள் நிற்பதை காணமுடிகிறது. இதனால், அசம்பாவிதம் ஏற்படும் முன்னரே உரிய நடவடிக்கை எடுத்து யானைகளை விரட்டுவது மட்டுமின்றி யானைகள் நிரந்தரமாக வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுகக வேண்டும் என்ற அவர்கள், காட்டு யானைகளால் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என கிராம மக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர்.