தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவை நிர்வகிக்கும் பிரசார் பாரதி நிறுவன தலைவர் திடீர் ராஜினாமா
புதுடெல்லி: தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவை நிர்வகிக்கும் பிரசார் பாரதி நிறுவன தலைவர் திடீரென ராஜினாமா செய்து உள்ளார். தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை நிர்வகிக்கும் இந்தியாவின் பொதுத்துறை ஒலிபரப்பு நிறுவனமான ‘பிரசார் பாரதி’ தலைவர் நவ்னீத் குமார் செகல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் ஏற்று கொண்டுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவரான இவர், கடந்தாண்டு மார்ச் 16ம் தேதி பிரசார் பாரதியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு 3 ஆண்டுகள் பதவி காலம் இருக்கும் நிலையில் திடீரென அவர் ராஜினாமா செய்தி ருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், அரசு பணியில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். பிரசார் பாரதி தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், உத்தரபிரதேச அரசின் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றியவர்.
உ.பி.யில் ஆக்ரா-லக்னோ விரைவு சாலை உட்பட பல பெரிய உள்கட்டமைப்பு மற்றும் கொள்கை திட்டங்களுக்கு தலைமை தாங்கியவர். அவரது திடீர் பதவி விலகலுக்கான காரணம் தெரியவில்லை. நவ்னீத் குமார் செகல் ராஜினாமாவை தொடர்ந்து, பிரசார் பாரதியின் புதிய தலைவர் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. இருப்பினும், பிரசார் பாரதி சட்டம், 1990ன் படி, தலைவர் பதவியும் மற்றும் பிற உறுப்பினர்களின் பதவிகளும் காலியாக இருக்கும்போது, பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி தற்போதைய செயல்பாடுகளை கவனித்துக்கொள்வார். தற்போது, கௌரவ் திவேதி தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். எனவே, புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் நிர்வாக பணிகளைக் கவனித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.