கார்கே மெண்டலாகி விட்டார்: நட்டா பேச்சால் சர்ச்சை; எதிர்க்கட்சிகள் அமளியால் மன்னிப்பு கேட்டார்
இதுதொடர்பாக நட்டா பேசும் போது,’ கார்கே மிகவும் மூத்த தலைவர், ஆனால் அவர் பிரதமரைப் பற்றி கருத்து தெரிவித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பிரதமர் மோடி 11 ஆண்டுகளாக பதவியில் இருக்கிறார். அவர் உலகின் மிகவும் பிரபலமான தலைவர். ஆனால் உங்கள் கட்சி மீது உங்களுக்கு மிகுந்த அன்பு இருப்பதால், உங்கள் மன சமநிலையை இழந்து நீங்கள் மிகவும் வேதனையில் இருக்கிறீர்கள். அதனால் பிரதமர் மோடி மீது அந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள்’ என்று கூறினார்.
நட்டா இவ்வாறு பேசியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். உடனே கார்கே எழுந்து பேசும் போது, ‘நான் மிகுந்த மரியாதை வைத்துள்ள சில தலைவர்கள் இந்த அவையில் உள்ளனர். நட்டா அவர்களில் ஒருவர். ராஜ்நாத்சிங்கும் அவரும் சமநிலையை இழக்காமல் பேசும் அமைச்சர்கள். ஆனால் நட்டா இன்று என்னை மனநிலை இழந்து விட்டேன் என்று கூறுகிறார். இது அவமானகரமான விஷயம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், நான் இதை அப்படியே விட்டுவிடப் போவதில்லை’ என்றார். இதையடுத்து நட்டா மன்னிப்பு கேட்டார்.
அவர் கூறுகையில்,’நாங்கள் கார்கேவை மதிக்கிறோம். நான் என் வார்த்தைகளைத் திரும்பப் பெறுகிறேன். உங்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நீங்களும் உணர்ச்சிகளால் வழிதவறிச் செல்லப்பட்டீர்கள். பிரதமரின் கண்ணியத்தைக் கூட நீங்கள் கவனிக்க முடியாத அளவுக்கு வழிதவறிச் சென்றீர்கள். அது வருத்தமளிக்கிறது’ என்று நட்டா கூறினார்.
நாடாளுமன்ற துளிகள்
* அமித்ஷா உரையை பாராட்டிய மோடி
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை பிரதமர் மோடி பாராட்டினார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தீவிரவாதிகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்த ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் பற்றிய முக்கிய விவரங்களை வழங்கி உள்ளார். நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான அரசின் முயற்சிகளும் அவரது உரையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
* 6 நாட்களுக்குப் பின் நடந்த கேள்வி நேரம்
மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கிய முதல் நாளில் இருந்தே அமளிகள் காரணமாக மக்களவையில் கேள்வி நேரம் நடக்காமல் தடைப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் விவாதம் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், அமளிகள் அடங்கி உள்ளன. இதனால் 6 நாட்களுக்குப் பிறகு நேற்று தான் முதல் முறையாக கேள்வி நேரம் சுமூகமாக நடந்தது. காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும் நடந்த கேள்வி நேரத்தில் பல முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது.
* விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது
மக்களவையில் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பிரதமர் மோடி அளித்த உறுதிமொழி குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சவுகான், ‘‘பிரதமர் மோடி தலைமையிலான அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையில் வேளாண் விளைபொருட்களை சாதனை அளவில் கொள்முதல் செய்துள்ளது. மானிய விலையில் உரங்கள் கிடைக்கச் செய்துள்ளது. மேலும் ரூ.1.83 லட்சம் கோடி மதிப்புள்ள காப்பீட்டு கிளைம்களை வழங்கி உள்ளது. சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை மோடி அரசு ஏற்றுக்கொண்டது என்று தெரிவித்தார்.
* எதிர்க்கட்சி எம்பிக்கள் நுழைவாயில் போராட்டம்
நாடாளுமன்றம் நேற்று காலை கூடுவதற்கு முன்பாக, இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த எம்பிக்கள் பலரும் நுழைவாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார் வாக்காளர் பட்டிய சிறப்பு தீவிர திருத்தத்தை கைவிட வலியுறுத்தி நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்றனர். வாக்குகளை திருடுவதை நிறுத்த வேண்டும், சிறப்பு தீவிர திருத்தத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.